மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 20 செப் 2019

போலி என்கவுன்டர்: அமித் ஷாவுக்கு லஞ்சம்!

போலி என்கவுன்டர்: அமித் ஷாவுக்கு லஞ்சம்!

சொராபுதீன் போலி என்கவுன்டர் சம்பவத்தில் பாஜக தலைவர் அமித் ஷா ரூ. 70 லட்சம் லஞ்சம் பெற்றதாக விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்தவர் சொராபுதீன் ஷேக். லஷ்கர் இ தைபா போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் இவருக்குத் தொடர்பு இருந்ததாக குஜராத் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி தனது மனைவியுடன் ஐதராபாத்தில் இருந்து மகாராஷ்டிரா வந்துகொண்டிருந்த அவரை குஜராத் போலீசார் கைது செய்தனர். மூன்று நாட்கள் கழித்து சொராபுதீன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவர் கொல்லப்பட்ட 2 நாட்கள் கழித்து அவரது மனைவி கவுசர் பியும் கொல்லப்பட்டார். இந்நிலையில், போலியான என்கவுன்டரில் சொராபுதீன் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த என்கவுன்டரை நேரில் பார்த்த ஒரே சாட்சி துளசிராம் பிரஜாபதி. இவரும் சொராபுதீனும் மார்பிள் வியாபார விஷயமாகத் தொடர்பு வைத்திருந்தவர்கள். தொடர்ந்து 2006ஆம் ஆண்டு போலீஸ் கஸ்டடியில் இருந்த பிரஜாபதியும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தார்.

அவரின் அமைச்சரவையில் அமித் ஷா உள்துறை அமைச்சராக இருந்தார். போலி என்கவுன்டர் தொடர்பாக அமித் ஷா உட்பட 38 அதிகாரிகள்மீது புகார் பதிவு செய்யப்பட்டது. பின்னாளில் அமித் ஷா கைது செய்யப்பட்டார்.

போலி என்கவுன்டர் வழக்கை விசாரிக்க அமிதாப் தாக்கூர் என்பவரை விசாரணை அதிகாரியாகக் கடந்த 2005ஆம் ஆண்டு சிபிஐ நியமித்தது. தற்போது அவர் பதவியில் இல்லை. இந்நிலையில், மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று ( நவம்பர் 19) ஆஜராகி வாக்குமூலம் அளித்த அவர், நடந்தது போலி என்கவுன்டர் என்றும் அமித் ஷா அதனால் பயனடைந்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

“படேல் சகோதரர்களுக்காக சொராபுதீன் போலியாக என்கவுன்டர் செய்யப்பட்டார். பின்னர் படேல் சகோதரர்களிடமிருந்து மூன்று தவணையாக ரூ. 70 லட்சத்தை அமித் ஷா பெற்றார். தீவிரவாதத் தடுப்புப் பிரிவு டி.ஜி.யாக இருந்த வன்சராவும் ரூ. 60 லட்சம் பெற்றார். உதய்பூர் முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தினேஷ், அகமதாபாத் முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் பாண்டியன், அகமதாபாத் முன்னாள் துணை ஆணையர் அபஸ் சுதஸ்மா ஆகியோரும் அரசியல் ரீதியாக பயனடைந்துள்ளனர்” என்று அமிதாப் தெரிவித்துள்ளார்.

படேல் சகோதரர்கள் மிரட்டப்பட்டார்கள் என்றும் அதன் பின்னரே அவர்கள் பணத்தை அளித்துள்ளனர் என்றும் கூறியுள்ள அமிதாப், “சொராபுதீன் வழக்கில் சிக்கவைக்கப்பட்ட 20 போலீஸ் அதிகாரிகள் யாருக்கும் பண ஆதாயமோ அரசியல் ஆதாயமோ கிடையாது” என்றும் குறிப்பிட்டுள்ளார். அமிதாப்பின் வாக்குமூலம் அமித் ஷாவிற்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டர் பக்கத்தில், “சொராபுதீன் மற்றும் அவரது மனைவி கொல்லப்படும்போதும் அமித் ஷாவும் வன்சாராவும் தொலைபேசியில் அவ்வப்போது தொடர்புகொண்டு பேசியுள்ளனர். என்கவுன்டரில் ஈடுபட்டவர்களுடனும் பேசியுள்ளனர். ஆனாலும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.

செவ்வாய், 20 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon