மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 நவ 2018

சிறப்புக் கட்டுரை: பணமதிப்பழிப்பை ஏன் நினைவுகூர வேண்டும்?

சிறப்புக் கட்டுரை: பணமதிப்பழிப்பை ஏன் நினைவுகூர வேண்டும்?

உதயன் முகர்ஜி

கடந்த நவம்பர் 8ஆம் தேதியன்று கறுப்பு நிற கைப்பட்டைகளை அணிந்துகொண்டு ஒரு குழுவினர் டெல்லியின் இந்தியா கேட்டைச் சுற்றி வலம் வந்துள்ளனர். டெல்லியின் காற்று மாசுபாட்டுக்கு எதிராக அவர்கள் போராடுவதாகக் கருதலாம். எனினும், அந்தக் கறுப்புப் பட்டைகள் பணமதிப்பழிப்பின் இரண்டு ஆண்டுக்கால நிறைவு தினத்தைக் குறிப்பவையாக இருக்கலாம். பணமதிப்பழிப்பு இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரச் சீரழிவு என்றே கூறலாம். பொதுவாக மகிழ்ச்சியான தருணங்களுக்கே நினைவு தினங்கள் கொண்டாடப்படும். ஆனாலும், பணமதிப்பழிப்பு போன்ற பேரழிவுகளையும் உபசரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இல்லையெனில் இந்திய மக்கள் இதுபோன்ற வீழ்ச்சிகளை எளிதில் மறந்துவிடக்கூடும்.

பணமதிப்பழிப்பின் பொருளாதாரப் பின்விளைவுகள் பற்றி ஏற்கெனவே அதிகம் விவாதித்தாயிற்று. மேலும் அது ஊரறிந்த ஒன்று. இவ்விவகாரத்தில் பொருளாதாரம் சாராத கோளாறுகளையும் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவில், மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் நிபுணர்களுடனும், வல்லுநர்களுடனும் ஆலோசித்த பிறகே முக்கியக் கொள்கை முடிவுகள் எடுக்கப்படுவதாக மக்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். அதாவது, இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் இந்த நம்பிக்கை 2016 நவம்பர் 8ஆம் தேதியன்று நொறுங்கிவிட்டது. அந்த நாளில் பிரதமர் திடீரெனத் தொலைக்காட்சியில் தோன்றி 100 கோடிக்கும் மேலான மக்களிடம் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கூறிவிட்டார். அந்நாளிலேயே, பின்விளைவுகளைக் கண்டுகொள்ளாமல் ஆட்சி செய்யக்கூடிய சர்வாதிகாரியின் ஆட்சி நாடாக இந்தியா உருமாறிவிட்டது.

பணமதிப்பழிப்பு என்பது மத்தியக் காலத்தைச் சேர்ந்த ஒரு அரசன் எடுக்கக்கூடிய முடிவாகத்தான் இருக்க முடியும். இந்த முடிவைக் கண்டு மோடியின் அமைச்சர்களே அதிர்ச்சிக்குள்ளானாலும் கூட, பணமதிப்பழிப்பு ஒரு அதிபுத்திசாலித்தனமான முடிவு என முட்டுக்கொடுக்கும் நிலைமைக்கு அமைச்சர்கள் தள்ளப்பட்டனர்.

நாட்டின் முக்கிய அரசு நிறுவனங்கள் மீது மோடி எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார் என்பதையும் பணமதிப்பழிப்பு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. பணமதிப்பழிப்பு போன்ற பெரிய நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பு ஒருமுறையாவது ரிசர்வ் வங்கியின் ஆளுநருடன் பிரதமர் மோடி ஆலோசித்திருக்க வேண்டாமா? ஆலோசித்திருக்கலாம், ரிசர்வ் வங்கி ஆளுநரின் முடிவு வேறுவிதமாகவும் இருந்திருக்கலாம். ஆனால், அவ்வாறு ஆலோசித்திருந்தால் ஒரு அரசனுக்கான அம்சங்கள் இல்லாமல் போயிருக்கும். ஒரு அரசன் யாரது கருத்துகளைப் பற்றியும் கருதாமல் தனது முடிவுகளை அறிவித்துவிடுவான். இதை ஒரு பக்கம் வைத்துக்கொண்டு, இந்தியாவின் ராணுவ அமைப்புகளின் தலைவர்களுடன் ஆலோசிக்காமல் அண்டை நாடு மீது மோடி போரை அறிவிப்பதாக எண்ணிப் பாருங்கள்! அப்படிச் செய்தால் பணமதிப்பழிப்பைப் போலவே அதுவும் ஒரு ராணுவ முடிவாக இருக்கும்.

சர்வாதிகாரிகள் அனைவரும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள். அவர்களுக்கு அமைப்புகளும், அவற்றின் தலைவர்களும் ஒரு பொருட்டே அல்ல. 1969ஆம் ஆண்டில் வங்கிகளை தேசியமயமாக்கியபோது பிரதமர் இந்திரா காந்தி ரிசர்வ் வங்கியின் அப்போதைய ஆளுநரான எல்.கே.ஜாவிடம் தகவல் தெரிவிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநரான உர்ஜித் படேலுக்கும் இதேபோன்ற அவமரியாதை நேர்ந்துள்ளது.

பிரதமர் ஒரு நேர்மையான மனிதர் எனவும், அவர் ஊழல்வாதி இல்லையெனவும் பெரும்பாலான இந்தியக் குடிமக்கள் நம்பிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் நேர்மை என்பது ஊழலை அடிப்படையாகக் கொண்டது மட்டுமல்ல; அதற்கு வேறு பல அம்சங்களும் உண்டு. ஒரு தலைவர் தவறான ஆலோசனையின் அடிப்படையில் ஒரு பெரிய முடிவை எடுக்கும்போதும், அது மாபெரும் அளவில் தோல்வியடையும்போது அவதிப்படுவது நாட்டின் குடிமக்கள் மட்டுமே.

பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும்கூட இன்னும் அது ஒரு ஆக்கப்பூர்வமான தீர்மானம் என்று அரசு காட்டிக்கொள்ள விரும்புகிறது. பணமதிப்பழிப்பை விமர்சிப்பவர்களை எதிர்ப்பதற்காக அமைச்சர்களையும், மற்ற பேச்சாளர்களையும் அரசு ஏவிவிடுகிறது. உயர்ந்த தலைவர்கள் தங்களது தவறை ஒப்புக்கொண்டு மக்கள் முன் அடிபணிந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்வர். இவ்வாறு தவறை ஒப்புக்கொள்வதால் அவர்கள் எந்த விதத்திலும் குறைந்துபோய்விடவில்லை.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை, ஒரு பழங்குடி அரசன் ஆளும் பழங்குடி ஆட்சி போல மாற்றிய பெருமை பணமதிப்பழிப்பு நடவடிக்கையையே சேரும். இந்த மாபெரும் சீர்கேட்டை இந்தியக் குடிமக்கள் என்றென்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும். முக்கியப் பதவிகளில் இருக்கும்போது ஒருவருக்கு பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டும். ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயலதிகாரியான சாந்தா கோச்சர் செய்த வருந்தத்தக்க தவறால் அவர் தனது வேலையை இழந்ததுடன் நன்மதிப்பையும் சேர்த்தே இழந்தார். ஆனால் இந்தியாவிலோ, ஒரு தந்தை தனது குழந்தை பசியுடன் தூங்கச் செல்வதைப் பார்த்துவிட்டு, புகழ்பெற்ற ராமர் கோயிலைக் கட்டுவது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.

நன்றி: ஸ்க்ரால்

தமிழில்: அ.விக்னேஷ்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

சனி 24 நவ 2018