மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 27 நவ 2018

சிறப்புக் கட்டுரை: விவசாயத்தை விரும்புகிறார்களா விவசாயிகள்?

சிறப்புக் கட்டுரை: விவசாயத்தை விரும்புகிறார்களா விவசாயிகள்?

இந்திய விவசாயிகளின் நிலை (பாகம் 2)

இந்திய விவசாயிகளின் தற்போதைய நிலை என்னவென்பது குறித்து டெல்லியைச் சேர்ந்த சென்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டீஸ் நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு விளக்கும் இந்திய விவசாயிகளின் நிலையை மின்னம்பலம் வாசகர்களுக்காகத் தொடராக வெளியிட்டு வருகிறோம். அதன் இரண்டாம் பகுதி இன்று.

வேளாண் துறையில் விவசாயிகளின் ஆர்வம் குறைந்துவிட்டதா?

விவசாயிகளின் சமூகப் பொருளாதார நிலைகளில் பல்வேறு இன்னல்கள் இருப்பதாக விவசாயிகள் கூறினாலும்கூட, இந்த ஆய்வில் பங்கெடுத்த 60 விழுக்காடு விவசாயக் குடும்பங்கள் விவசாயத் தொழிலை விரும்புவதாகவே கூறியுள்ளன. 40 விழுக்காடு குடும்பங்கள் மற்ற ஏதேனும் தொழில் வாய்ப்புகள் இருந்தால் மாறிவிடத் தயாராக இருப்பதாகக் கூறுகின்றன.

தனிநபர்களைப் பொறுத்தவரையில் 72 விழுக்காடு விவசாயிகள் விவசாயத்தை விரும்புவதாகவும், 22 விழுக்காட்டினர் விவசாயத்தை விரும்பவில்லை என்றும் கூறுகின்றனர். ஆனால், இதிலும் கூட ஒவ்வொரு மண்டலத்திலும் விவசாயிகளின் மனநிலை மாறுபட்டே இருக்கிறது. மத்திய இந்தியாவில்தான் விவசாயிகள் அதிகளவில் (84%) வேளாண் தொழிலை விரும்புகின்றனர். வடக்கு இந்தியாவில் 67 விழுக்காட்டினரும், கிழக்கு இந்தியாவில் 69 விழுக்காட்டினரும் மட்டுமே விவசாயத்தை விரும்புகின்றனர்.

யார் விவசாயத்தை விரும்பவில்லை?

ஒரே பகுதியில் இருக்கும் விவசாயிகளிடையே கூட விவசாயத் துறையின் மீதான ஆர்வத்தில் மாறுபாடு இருக்கிறது என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. விவசாயிகளின் சமூகப் படிநிலைகளின் அடிப்படையில்தான் அவர்களின் ஆர்வமும் இருக்கிறது. பொதுவாக, நிலமற்ற விவசாயிகளிடம் விவசாயத்தின் மீதான ஆர்வம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. சிறு, குறு மற்றும் பெரும் விவசாயிகள் என ஆர்வத்தின் அளவு படிப்படியாக அதிகரிக்கிறது. நிலமற்ற விவசாயிகளில் வெறும் 44 விழுக்காட்டினர் மட்டுமே விவசாயத்தை விரும்புகின்றனர். சிறு விவசாயிகளில் 74 விழுக்காட்டினரும், நடுத்தர விவசாயிகளில் 85 விழுக்காட்டினரும், பெரு விவசாயிகளில் 86 விழுக்காட்டினரும் விவசாயத்தை விரும்புகின்றனர்.

விவசாயத்தை விரும்புவதற்கான காரணங்கள்

விவசாயத்தை விரும்பும் 72 விழுக்காடு விவசாயிகளில் பெரும்பான்மையானவர்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தவிதமான காரணமும் இல்லை என்பதைத்தான் இந்த ஆய்விலிருந்து நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால் விவசாயத்தை விரும்புபவர்களில் 60 விழுக்காட்டினருக்குப் பாரம்பரியத் தொழில் என்பது மட்டும்தான் பிடித்தமான காரணமாக இருக்கிறது. 15 விழுக்காட்டினர் விவசாயி என்று சொல்வது பெருமையாக இருப்பதால் விவசாயத்தை விரும்புவதாகக் கூறுகின்றனர். விவசாயத் தொழிலில் நல்ல வருவாய் கிடைப்பதால் அதை விரும்புவதாக 10 விழுக்காட்டினரும், விவசாயம் செய்வது மகிழ்ச்சியாக இருப்பதாக 10 விழுக்காட்டினரும் கூறியுள்ளனர்.

விவசாயத்தை விரும்பாததற்கான காரணங்கள்

விவசாயத்தை விரும்பவில்லை என்று கூறும் 22 விழுக்காட்டினரின் முதன்மைக் காரணமாக இருப்பது வருவாய் பற்றாக்குறைதான். இவர்களில் 36 விழுக்காட்டினர் குறைவான வருமானம் காரணமாகத்தான் விவசாயத்தை விரும்பவில்லை என்று கூறுகின்றனர். 18 விழுக்காட்டினர் விவசாயம் செய்வது பிடிக்கவில்லை என்றும், 16 விழுக்காட்டினர் விவசாயத்துக்கு எதிர்காலம் இல்லையென்றும், 9 விழுக்காட்டினர் வேறு வேலைகளுக்குச் செல்ல விரும்புவதாகவும், 8 விழுக்காட்டினர் விவசாயம் மிகவும் கடினமான தொழிலாகவும், அழுத்தம் நிறைந்ததாகவும் இருப்பதால் வெளியேற எண்ணுவதாகவும் கூறுகின்றனர்.

பெண்களின் பங்களிப்பு

மூன்றில் இரண்டு விவசாயிகள் (66%) அவர்களின் வீட்டிலுள்ள பெண்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறுகின்றனர். அதிலும் பெரு விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் 73 விழுக்காடு அளவிலும், சிறு விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் 42 விழுக்காடு அளவுக்கும் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். குறு விவசாயிகள் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் 68 விழுக்காடும், நடுத்தர விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் 72 விழுக்காடும் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். எஞ்சிய குடும்பங்களில் உள்ள பெண்கள் பகுதி நேரமாக வேளாண் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

67 விழுக்காடு பெண்கள் தங்களது குடும்பத்துக்கான போதிய வருவாயை விவசாயத்தின் மூலம் ஈட்ட முடியவில்லை என்கின்றனர். வேளாண் அல்லாத மற்ற வேலைகளில் ஈடுபடுவதன் மூலம்தான் குடும்பத்துக்கான போதிய வருவாய் ஈட்ட முடியும் என்று 43 விழுக்காடு பெண்கள் நம்புகின்றனர். 18 விழுக்காடு பெண்கள் விவசாயம் அல்லாத மற்ற வேலைகளுக்குச் செல்கின்றனர். 20 விழுக்காடு பெண்கள் மட்டுமே விவசாயத்தின் மூலமான வருவாய் தங்களது குடும்பத்துக்குப் போதுமானது என்கின்றனர்.

21 விழுக்காடு பெண்கள் அரிசி விலையுயர்வு முக்கியப் பிரச்சினையாக உள்ளது என்கின்றனர். 13 விழுக்காடு பெண்கள் வறுமை முக்கியப் பிரச்சினையாக உள்ளது என்கின்றனர். அதேபோல, விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த 63 விழுக்காடு இளைஞர்களும் விவசாயப் பணிகளுக்கு உதவி செய்கின்றனர். ஆனால், இவர்களில் 24 விழுக்காடு இளைஞர்கள் மட்டுமே விவசாயப் பணிகளைத் தொடர விரும்புகின்றனர். 76 விழுக்காடு இளைஞர்கள் விவசாயத்தை விடுத்து மற்ற பணிகளுக்கே செல்ல விரும்புகின்றனர். விவசாயத்தை விரும்பும் இளைஞர்களைப் பொறுத்தவரையில் அது அவர்களின் பாரம்பரியத் தொழில் என்பதுதான் முக்கியக் காரணமாக உள்ளது. விவசாயக் குடும்பங்களில் ஐந்தில் ஒரு வீட்டில் உள்ள பள்ளி செல்லும் குழந்தைகள் கூட விவசாய நடவடிக்கைகளுக்கு உதவி செய்கின்றனர் என்ற ஆச்சரியமான தகவலை இந்த ஆய்வு கூறுகிறது.

(தொடரும்...)

-பிரகாசு

முந்தைய கட்டுரை : இந்திய விவசாயிகளின் நிலை (பாகம் - 1)

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

செவ்வாய் 27 நவ 2018