மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 நவ 2018

விஷால் - தனுஷ்: பனிப்போர் அல்ல; நேரடி மோதல்!

விஷால் - தனுஷ்: பனிப்போர் அல்ல; நேரடி மோதல்!

தமிழ்த் திரைப்படத் துறையில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற நீண்ட வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், படத் தயாரிப்பாளர்கள் நலன் கருதி ரெகுலேஷன் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. தணிக்கைச் சான்றிதழ் பெறுவதை அடிப்படையாகக் கொண்டு படங்களுக்கான ரிலீஸ் தேதியை ஒழுங்குபடுத்திக் கொடுப்பது இக்கமிட்டியின் பணி. இதனால் தயாரிப்பாளர்கள் தங்கள் விருப்பம் போல் படத்தை ரிலீஸ் செய்வது கட்டுப்படுத்தப்பட்டது. அதேநேரம் ரிலீஸ் தேதியை தீர்மானிக்கும் முழு சுதந்திரத்தையும் தயாரிப்பாளர்களுக்கு இக்கமிட்டி வழங்கியது. இதனால் சிறு பட்ஜெட் படங்கள் தனித்து வரும்போது பெரிய பட்ஜெட் படங்கள் வெளியிடுவது தடுக்கப்பட்டது.

இந்த நடைமுறையைச் சீர்குலைக்கும் வேலையை, ‘நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது?’ என்கிற வரம்பு மீறல்களுக்குள் தலைவர் விஷாலை எதிர்ப்பவர்கள் செய்வது அவ்வப்போது நடைபெற்று வந்தது. இருப்பினும் தயாரிப்பாளர்கள் சங்கம் தன் முடிவில் உறுதியாக இருந்து வருகிறது. ‘ரெகுலேஷன் கமிட்டி முடிவை மீறும் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறி வந்த சங்கம், தற்போது ரெகுலேஷன் கமிட்டி முடிவை மீறி, திமிரு புடிச்சவன் படத்தை ரிலீஸ் செய்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி மீது நடவடிக்கை என அறிவித்துள்ளது.

டிசம்பர் மாதம் 14 அன்று சீதக்காதி, டிசம்பர் 21 அன்று அடங்க மறு, பூமராங், சிலுக்குவார்பட்டி சிங்கம், டிசம்பர் 28இல் கனா ஆகிய படங்களை ரிலீஸ் செய்து கொள்ள கமிட்டி அனுமதி வழங்கியுள்ளது. அடங்க மறு திரைப்படம் நீண்ட நாட்கள் காத்திருந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தனுஷ் தயாரிப்பில் அவர் நடித்துள்ள திரைப்படமான மாரி - 2 அதே நாளில் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த மாரி - 2 டிசம்பரில் முன்கூட்டியே வருவதற்குக் காரணம், தனுஷின் மாமனார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படம் பொங்கல் சமயத்தில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால்தான் என்கிறது தயாரிப்பாளர்கள் வட்டாரம்.

ரஜினி நடிப்பில் நேற்று (29.11.18) வெளியான 2.0 திரைப்படம் ஓடி முடிகிறபோது அந்தத் திரையரங்குகளில் மாரி - 2 படத்தைத் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. மாரி - 2 தனது ஓட்டத்தை முடிக்கிற சமயத்தில் அதே திரையரங்குகளில் ‘பேட்ட’ படத்தைத் திரையிடலாம் எனத் திட்டமிட்டு ரஜினி குடும்பம் காய் நகர்த்தி வருகிறது.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே நவம்பர், டிசம்பர், ஜனவரி என மூன்று மாதங்களை ஆக்கிரமித்துக் கொண்டால் பிற தயாரிப்பாளர்கள் படங்களை ரிலீஸ் செய்வது எப்படி, எப்போது எனக் கொந்தளிக்கின்றனர் தயாரிப்பாளர்கள். டிசம்பர் 28 அல்லது ஜனவரி 14 ஆகிய தேதிகளில் எதில் வேண்டுமானாலும் மாரி - 2 படத்தை ரிலீஸ் செய்து கொள்ளும்படி தனுஷிடம் விஷால் கூறியுள்ளார்.

விஷாலின் தொழில்முறைப் போட்டியாளராக உள்ள தனுஷ், இதை ஏற்பதாக இல்லை. ‘என் படத்தை எப்போது ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிப்பேன்’ எனக் கூறியதாகப் பேசப்படுகிறது. விஷால் எடுக்கும் முடிவுகளை அமல்படுத்த விடக் கூடாது என நினைத்துச் செயல்படும் தயாரிப்பாளர்களின் பேச்சை கேட்டுதான் சங்க முடிவுக்குக் கட்டுப்பட மறுத்து, தன்னிச்சையாக மாரி - 2 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார் தனுஷ் என்றும் விஷால் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.

தனுஷ் - ரஜினியை முன்னிறுத்தி விஷால் தலைமையைப் பலவீனப்படுத்தும் அரசியல் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது . விஜய் ஆண்டனி மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்தது போல், டிசம்பர் 21ஆம் தேதி மாரி - 2 ரிலீஸ் செய்யப்பட்டால் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் மத்தியில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்தப் பிரச்சினை பற்றி விவாதித்து முடிவு எடுக்க டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய அனுமதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் பங்கேற்கும் கூட்டத்தைத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகக் குழு இன்று காலை 11 மணிக்கு நடத்த உள்ளது. சங்கம் எடுக்கும் முடிவுக்கு தனுஷ் கட்டுப்படுவாரா அல்லது, அவ்வாறு கட்டுப்பட மறுக்கும்பட்சத்தில் விஷால், தனுஷ் மீது நடவடிக்கை எடுப்பாரா என்பதைத் தயாரிப்பாளர்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை! ...

3 நிமிட வாசிப்பு

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை!

வெள்ளி 30 நவ 2018