மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 14 அக் 2019

சமந்தா ஏற்ற சவால்!

சமந்தா ஏற்ற சவால்!

பிரதான கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் சவாலான கதாபாத்திரங்களையும் தேடி நடித்து வருகிறார் சமந்தா.

தெலுங்கில் பி.வி.நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா மீண்டும் மற்றொரு படத்தில் இணைந்துள்ளார். தென் கொரியாவில் 2014ஆம் ஆண்டு வெளியான படம் மிஸ் கிரானி. வயதான பெண் எதிர்பாராதவிதமாக இளவயது தோற்றத்தை அடைவதை மையமாகக் கொண்டு உருவாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இதில் 50 வயதுப் பெண்ணாக சமந்தா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இந்தக் கதாபாத்திரம் குறித்து சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“இதுவரை நான் செய்யாத சுவாரஸ்யமான கதாபாத்திரத்திற்காகத் தயாராகிவருகிறேன். இப்போது யோசித்துப் பார்த்தால் நான் பயப்படுபவளாகவும் எப்போதும் பதற்றம் கொண்டவளாகவுமே இருந்திருக்கிறேன். ஆனால் ஒரு போதும் சவாலை எதிர்கொள்ளத் தவறியதில்லை. பெரும்பாலான நேரங்களில் நாம் நினைப்பதை விடவும் தைரியமானவர்களாகவே நாம் இருக்கிறோம்” என்று படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் தனது கதாபாத்திரம் குறித்துக் கூறியிருப்பதுடன் படங்களைத் தேர்வு செய்யும்போது இருக்கும் மனநிலை குறித்தும் பதிவு செய்துள்ளார்.

நந்தினி தனது பதிவில், “அருமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன் எனது பயணம் தொடங்கியுள்ளது. நான் ரசித்துப் படத்தை உருவாக்கும்போது அதை நீங்கள் மிகவும் ரசித்துப் பார்ப்பீர்கள். இது தான் எனது கொள்கை” என்று கூறியுள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தயாராகிவருகிறது. இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் விரைவில் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சமந்தா வேம்பு என்ற கதாபாத்திரத்தில் சொந்த குரலில் டப்பிங் பேசி நடித்துள்ளார்.

சனி, 1 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon