மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 பிப் 2020

ஜாக்டோ ஜியோ: பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை!

ஜாக்டோ ஜியோ: பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை!

ஜாக்டோ ஜியோ அமைப்பு நிர்வாகிகளுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், ஊதிய முரண்பாட்டை நீக்குதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நீண்ட நாட்களாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர் ஜாக்டோஜியோ அமைப்பினர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று (நவம்பர் 30) பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் உ.மா. சுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, "எங்களின் எவ்வித கோரிக்கையையும் அரசு ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. முதல்வர் எங்களை அழைத்துப்பேச வேண்டும் என்பதற்கும் ஒப்புதல் தரவில்லை. உயர்மட்டக்குழுவில் நாளை விவாதித்து, இறுதி முடிவு எடுக்கப்பட்டு போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.

எங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்ப்பதாக தெரியவில்லை. முதல்வர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என இன்னும் நம்பிக்கை உள்ளது. முதல்வரிடம் இருந்து ஏற்புடைய பதில் வராதபட்சத்தில் அறிவித்தபடி போராட்டத்தை நோக்கிச் செல்வோம்" என்று தெரிவித்தனர். வேலூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெள்ளி, 30 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon