மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 30 மே 2020

சிறப்புச் செய்தி: ஸ்டெர்லைட் ஆலையின் தடை நியாயமற்றதா?

சிறப்புச் செய்தி: ஸ்டெர்லைட் ஆலையின் தடை நியாயமற்றதா?

எஸ்.செந்தளிர்

தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு மே 28ஆம் தேதி தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை இயக்கத்துக்குத் தடை விதித்தது. இந்தத் தடையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலைக்குத் தடை விதித்தது சட்டவிரோதமானது, முறையற்றது, இயற்கை நீதிக்கு எதிரான மீறல் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நவம்பர் 28ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது. இதற்கு அன்றைய தினம் முதலே சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

“இது நாங்கள் ஏற்கெனவே கணித்ததுதான்” என்கிறார் ஃபாத்திமா பாபு. இவர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் உறுப்பினர். அதுமட்டுமின்றி இந்த வழக்கில் இவரும் ஓர் அங்கமாவார். “நாங்கள் வேதாந்தா நிறுவனத்தின் வழக்கை விசாரிக்கும் மூவர் குழுவின் நடுநிலைத்தன்மை குறித்து முன்னதாக எங்களது சந்தேகங்களை வெளிப்படுத்தியிருந்தோம். ஆனால், எங்களது சந்தேகம் குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படாமல் தூக்கியெறியப்பட்டது” என்கிறார் ஃபாத்திமா.

ஆலை விரிவாக்கத்தைக் கண்டித்து மே 22ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 13 பேர் காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையின் இயக்கத்துக்கு மாநில அரசு தடை விதித்தது. 1996ஆம் ஆண்டு ஆலை அமைக்கப்பட்ட காலத்திலிருந்து சமூகச் செயற்பாட்டாளர்களாலும், உள்ளூர் குடியிருப்பு வாசிகளாலும் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த ஆலையால் சுற்றுப்புறப் பகுதிகளில் காற்று மற்றும் நீர் ஆகியவை மிகவும் மாசடைந்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழ்நாடு அரசு ஆலையை மூடுவதற்குப் பிறப்பித்த உத்தரவுக்கும், ஆலை இயங்கத் தடை விதிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்ததற்கும் அப்போதே ஜூன் மாதத்தில் வேதாந்தா நிறுவனம் சவால் விட்டிருந்தது. மே 23ஆம் தேதியே வேதாந்தா நிறுவனத்துக்கு மின் விநியோகமும் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து ஆலையை மீண்டும் இயக்க வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த முறையீட்டை விசாரிக்க நவம்பர் 23ஆம் தேதி மூவர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு சுயாதீன விசாரணையை மேற்கொண்டது. இந்த மூவர் குழுவானது சுற்றுச்சூழல், அபாயகரமான கழிவு மேலாண்மை மற்றும் சட்ட விதிமீறல்கள் போன்றவற்றை கருத்தில் கொள்ளவே இல்லையென்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் கூறுகின்றனர்.

இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைத்துக்கொண்டவர்களுக்கு இதுவரையில் அறிக்கையின் நகல் வழங்கப்படவில்லை. “அறிக்கையின் நகலைக் கேட்டு நாங்கள் மனுத் தாக்கல் செய்துள்ளோம். பசுமைத் தீர்ப்பாயம் டிசம்பர் 7ஆம் தேதி நகல் வழங்குவதைக் கருத்தில் கொள்ளலாம். அன்றுதான் வழக்கின் அடுத்த விசாரணை நடக்கவுள்ளது” என்கிறார் ரித்விக் தத்தா. இவர் ஃபாத்திமா பாபுவின் சார்பில் ஆஜராகியிருக்கும் வழக்கறிஞராவார்.

மாநில அரசு நிரந்தரமாக இழுத்து மூடிய ஆலையைத் திறப்பதற்கு ஆணையிடத் தீர்ப்பாயம் பொருத்தமான மன்றம் அல்ல என்கிறார் ஃபாத்திமா பாபு. “அரசின் முடிவுகளுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றத்துக்கும், உயர் நீதிமன்றத்துக்கும் மட்டுமே அதிகாரம் உள்ளது” என்கிறார் அவர்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கச் சில நிபந்தனைகளையும் மூவர் குழு விதித்துள்ளதாகத் தத்தா கூறுகிறார். “என்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்று எங்களுக்குத் தெரியவில்லை. அடுத்த விசாரணைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்கிறார் அவர். வேதாந்தா நிறுவனம் மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு இணங்கிச் செயல்படுவதை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மூவர் குழு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

போராட்டம் - ஆலை மூடல் - சவால்

மூன்று பேர் குழுவானது தனது அறிக்கையை 48 தொகுதிகளாக நவம்பர் 27ஆம் தேதி சமர்ப்பித்துள்ளது. மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், தமிழ்நாடு அரசும் நிறுவனத்துக்கு எந்த வாய்ப்பும் வழங்கவில்லை என்று மூன்று பேர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ரித்விக் தத்தா கூறியுள்ளார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை டிசம்பர் 7ஆம் தேதி நடத்தப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. ஆகஸ்ட்டில் இந்தக் குழு அமைக்கப்பட்டபோது தேசியத் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவில், ஸ்டெர்லைட் காப்பர் ஆலை நாட்டின் காப்பர் தேவைக்கு ஆற்றிய பங்கு மற்றும் 1,300 பேரை வேலைக்கு அமர்த்தியது ஆகியவற்றைப் புறக்கணிக்க முடியாது என்று கூறியிருந்தது.

ஸ்டெர்லைட் ஆலை ஆண்டுக்கு 4,38,000 டன் காப்பர் ஆனோடுகளை உற்பத்தி செய்கிறது. அதாவது ஒரு நாளைக்கு 1,200 டன் காப்பர் இந்த ஆலையில் உற்பத்தியாகிறது.

செப்டம்பரில் மேகாலயா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் கமிட்டி உருவாக்கப்பட்டது. அறிவியலாளர்கள் சதிஷ் சி.கார்கோதி மற்றும் ஹெச்.டி.வரலக்ஷ்மி ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளனர். இவர்கள் மூவரும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குச் சென்று ஆய்வுகளை நடத்தினர். அக்டோபரில் தூத்துக்குடி மற்றும் சென்னையில் பொது ஆலோசனைகளையும் கேட்டனர்.

சென்னையில் அக்டோபர் 5ஆம் தேதி நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அளிக்கப்பட்டதாக நியூஸ் மினிட் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. அதில் 1.7 லட்சம் கோரிக்கைகள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்திடமிருந்து மட்டுமே வந்ததாகக் கூறப்படுகிறது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது என்று ஒரு மாதத்துக்கு முன்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆலை மூடப்பட்ட பிறகு ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளும் உறுதிப்படுத்துவதாக ஃபாத்திமா பாபுவும் கூறுகிறார்.

நன்றி: ஸ்க்ரோல்

நேற்றைய கட்டுரை: வீழ்கின்றனவா டிஜிட்டல் வாலட்டுகள்?

தமிழில்: பிரகாசு.ர

மின்னஞ்சல் முகவரி: [email protected]

புதன், 5 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon