மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 24 டிச 2018

‘செல்ஃபி புள்ள’யின் உளவியல்!

‘செல்ஃபி புள்ள’யின் உளவியல்!

ஆர்.அபிலாஷ்

எங்கள் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வரங்கில் என் நண்பரான மெல்ஜோ எனும் ஆசிரியர் ஒரு கட்டுரை வாசித்தார். தற்படங்கள் இன்று ஒரு சமூக சுயமாக, தன்னிலையாக மாறிவருகிறது என்பதே அவரது கருதுகோள். அதாவது, நாம் ஒவ்வொருவரும் சமூக அங்கீகாரத்துக்காகத் தற்படங்களை எடுத்துச் சமூக வலைதளங்களில் வெளியிடுகிறோம். இது மிகையாக மாறும்போது தற்பட விரும்பிகளுக்குச் சமநிலை குலைகிறது. பல எடிட்டிங் ஆப்கள் மூலம் தம் தோற்றத்தை மெருகேற்றிப் பொய்யான பிரதியை அவர்கள் வெளியிடுகிறார்கள். இதற்கு விருப்பக் குறிகள் அதிகமாக ஆக, உண்மைக்கும் பொய்க்கும் இடையே இடைவெளி அதிகமாகிறது.

ஒரு நண்பர் இதை வேறுவிதமாய் முன்வைத்தார். நாம் அனைவரும் ஒரு குறிப்பிட்ட உடல் தோற்றத்தை மரபியல் ரீதியாய்ப் பெற்றிருக்கிறோம். இத்தோற்றத்தோடு உடன்பட முடியாமல் போகும்போது, மாற்று சுயத்தைக் கற்பிக்கும் வண்ணம் நாம் தற்படங்களை எடுத்து வெளியிடுகிறோம்; அதைச் சமூக வலைதளங்களில் நண்பர்கள் அங்கீகரிக்கும்போது புளகாங்கிதம் அடைகிறோம் என்றார்.

நான் அமைதியாக இருந்தேன். எனக்கு ஆரம்பத்திலிருந்தே நண்பரின் கருதுகோளில் ஏதோ ஒன்று முரணாய், இடறலாய் பட்டது. வெளியே வந்து கொஞ்ச நேரத்தில் புரிந்துபோனது. அழகற்றவர்களை விட அழகானவர்களே அதிகமாய் தற்படங்களை எடுத்து வெளியிடுகிறார்கள். மிக “அசிங்கமான” முக அமைப்பு கொண்ட ஒருவர் தினமும் தற்படங்கள் வெளியிடுவதும் விருப்புக்குறிகளின் அங்கீகாரம் பெறுவதும் நடப்பதில்லை. ஓரளவுக்கு மேல் எடிட் செய்து தன் தோற்றத்தை முழுக்க மாற்ற முடியாது. மாநிறத்தைக் கொஞ்சம் சிவப்பாக்கலாம், பளிச்செனக் காண்பிக்கலாம், பருமனைச் சற்றே மறைக்கலாம். ஆனால், குரூரமான ஒருவரோ, அழகே இல்லாத ஒருவரோ தன்னை அழகனாக / அழகியாய் தற்படத்தில் சுலபத்தில் மாற்றிக் காண்பிக்க முடியாது.

அழகு குறைவான ஒருவர் நன்றாய் மேக் அப் அணிந்தும் வாளிப்பாகத் தோன்றும் ஆடைகள் அணிந்தும் இதே அழகு மேம்பாட்டைச் செய்ய முடியும். களிம்புகளுக்குப் பின்னால், சிகை அலங்காரத்துக்குப் பின்னால் பலர் வேறு ஒருவராக இருக்கிறார்கள். ஆக, இதைத் தற்படத்தில்தான் செய்ய வேண்டும் என்றில்லை. தோற்றத்தை ஒருவர் திருத்துவது அழகின்மையை ஈடுகட்டுவதாக அல்லது தாழ்வு மனப்பான்மைக்கு மாற்றாக அன்றி, மற்றொரு தன்னிலையைக் கட்டமைப்பதாகவே பார்க்க வேண்டி உள்ளது. உதாரணமாய், மேக் அப் அணிய விரும்பாமல் வெளியிடங்களுக்கு வரும் அழகிய பிரபல நடிகைகள் இருக்கிறார்கள். இவர்கள் தமது பிரபல, அன்றாடத் தன்னிலைகள் என இரண்டு தன்னிலைகளை வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். இரண்டையும் சமமாகப் பார்க்கிறார்கள்.

இயல்பிலேயே அழகான பெண்கள் மேக் அப் அணிய அவசியமே இல்லை. ஆனாலும் ஏன் செய்கிறார்கள் என்றால் தம் உடலைத் திருத்தி ஓர் ஓவியத்தைப் போல வரைய அவர்கள் விரும்புகிறார்கள். அதாவது நீங்கள் ஓர் அழகிய பெண்ணென்றால் உங்கள் உடலே நீங்கள் வரையும் ஓவியம் ஆகிறது.

ஓரளவு அழகானவர் தன்னைத் திருத்தித் தற்படம் வெளியிடுகையில் அவர் ஒரு மாற்றுத் தன்னிலையை உருவாக்கி அதை தானே ரசித்து வலைதளங்கள் வழி சமூக அங்கீகாரமும் பெறுகிறார். ஓர் அழகி தற்படங்களால் தன் பிரதிபிம்பங்களைப் பெருக்கும்போது, அவை “பிரதிபிம்பங்கள்” அல்ல, அப்பெண்ணின் தன்னிலை நீட்டிப்பு. தற்படம் ஒருவரின் இரட்டையாக மாறுகிறது. இரட்டை பின்னர் நான்காக, எட்டாக, பதினாறாகப் பெருகுகிறது.

எந்தப் பெண்ணிடமும் சென்று “நீங்கள் அழகுதான். ஆனால், உங்கள் தற்படம் அசிங்கமாக உள்ளது” என சொல்ல முடியாது. அது அவரைக் காயப்படுத்தும். அவர் தன் உடலையும் தன் தற்படத்தையும் சமநிலையாக வைத்தே பார்க்கிறார். இது பிறழ்வு அல்ல. தன் பிம்பத்தைத் தானாக நினைப்பதன் பிரச்சினை அல்ல.

ஒரு மனிதன் தனது தன்னிலையைத் தொடர்ந்து பற்பல வடிவங்களில் பெருக்கிட விரும்புகிறான், அதன் வழி ஒரு பேரனுபவத்தைப் பெறுகிறான். மனிதனின் ஆதார மையம் என்ற ஒன்றும் அதன் பிரதிபலிப்புகள் என மற்றொன்றும் உள்ளதாய் நம்புவது புராதனச் சிந்தனை; பின்நவீனத்துவத்தில் நிராகரிக்கப்பட்ட சிந்தனை அது. மனிதன் மொழிக்குள் தன்னைப் பெருக்கியபடியே இருக்கிறான், அதுவே அவனது இருப்பு என்பதே இன்றைய தத்துவம். இதற்கான கச்சித உதாரணமாகத் தற்படங்கள் உள்ளன.

இப்படி ஒருவர் தன்னைப் பண்பாட்டுக்குள், மொழிக்குள், உரையாடல்கள் வழி பெருக்கித் தன் படைப்பான தன்னழகையும் ரசிக்கிறார். இதைச் சுய-பெருக்க விருப்பம் என விளக்கலாம். அவர் தன்னை மேம்படுத்தத்தான் அப்படிச் செய்கிறார் என்றும் கூறிவிட முடியாது. ஏனென்றால் அவர் தூங்கி வழிந்தும், களைத்துப்போயும், மேக் அப் அணியாமலும்கூடத் தற்படங்களை வெளியிடுவார். நிஜ உலகிலும் அவர் மேக் அப் இன்றித் தெரிவார். ஆக, அழகு மேம்பாடு மட்டும் காரணமல்ல. அழகின்மையை ஈடுகட்டுவதும் தற்படம் எடுப்பதன் ஒரே நோக்கமல்ல.

இணையத்தில் கிடைக்கும் கேத்ரினா கைஃப்பின் தற்படங்களைப் பாருங்கள். மிகுதியான மேக் அப்புடன், மேக் அப் இன்றித் தூங்கி வழிந்தபடி, டல்லாக எனப் பல விதங்களில் அவர் தற்படங்கள் வெளியிடுகிறார். ஏற்கனவே கொண்டாடப்படும் அழகியாக இருக்கும் ஒரு நடிகை ஏன் தற்படம் எடுக்க வேண்டும்?

இத்தகைய அழகிகளின் / அழகர்களின் தற்படங்களுக்கே கூடுதல் அங்கீகாரமும் கவனமும் கிடைக்கின்றன. ஆகையால் அத்தகையோரே கூடுதலாய் தற்படங்கள் எடுக்கத் தூண்டப்படுகிறார்கள். உலகமே சிலாகிக்கும் அழகு முகம் கொண்ட பெண் தற்படம் எடுத்துத் தன்னைச் சமூக வலைதளங்களில் பெருக்கிக்கொள்ளும்போது அவர் தனது எந்தக் குறையையும் நிவர்த்தி செய்வதாக அர்த்தமில்லை. தன் அழகைக் கூட்டிக்கொள்ளவோ, அப்படிச் சித்திரிக்கவோ கேத்ரினாவுக்கு அவசியமில்லை. மாறாக அவரைப் போன்ற பிரபலம் ஜெராக்ஸ் எந்திரத்தைப் போல மாறுகிறார். அவர் எண்ணற்ற முறை தன்னைப் பெருக்கிக்கொண்டே இருக்கிறார். இதை ஒருவிதப் படைப்பூக்க மனநிலை என்றும் பார்க்கலாம். சச்சினும் கோலியும் மோடியும் தற்படங்கள் எடுக்கும் போதும் இதுவே நடக்கிறது. அவர்கள் கூடுதலாய்ப் பெற இனி ஒன்றும் மீதமில்லை.

தற்படங்கள் மூலம் ஒரு பிரபலம் சமூகத்துடன் அணுக்கமான ரீதியில் உறவாட முடிகிறது. இது ஊடகங்களில் வெளிவரும் முறைசார் புகைப்படங்களில் சாத்தியமாகாது. மோடியின் தற்பட விருப்பத்தைச் சமூக அணுக்கமாதல் திட்டமாகவே பார்க்கிறேன். ஆனால், தற்படங்களின் உளவியல் அந்தரங்கமான சமூகமாக்கத்துடன் முடிவதில்லை.

நாம் அனைவருக்கும் நம்மைத் தொடர்ந்து பெருக்கிக்கொள்ளும் விருப்பம் இன்று உள்ளது. இன்று நாம் கூடுதலாய் நம்மைப் பற்றிப் பேசுகிறோம், நம்மைப் பற்றி எழுதுகிறோம், நம்மை ரசிக்கிறோம், கொண்டாடுகிறோம், நம்மிடம் உள்ள ஒரு குறையினால் தூண்டப்பட்டு, தாழ்வுணர்வால் இதைச் செய்வதில்லை. தன்னை வெறுக்கிறவன் தன்னை எப்படி ரசிக்கவும் முன்வைக்கவும் முடியும்?

தன்னை ஒருவர் பெருக்கும்போது அவர் தன்னை நகலெடுப்பதில்லை. மாறாக, தனது தன்னிலை ஒன்றைப் புதிதாய் உருவாக்கிக்கொள்கிறார். 96 படம் ஓர் உதாரணம். அதில் பாத்திரங்களும், பாத்திரங்களைக் கண்டு சிலாகித்து அவர்கள் வழியாகப் பார்வையாளர்களும் காலத்தில் பின்னோக்கிச் சென்று நினைவேக்கத்தில் தம்மைப் பெருக்குகிறார்கள். அந்த நினைவேக்கத்தில் தோன்றும் தன்னிலை “நாம் அல்ல” என நாம் நினைப்பதில்லை. தற்படம் எடுக்கையிலோ நாம் முன்னோக்கிச் சென்று நம்மையே பெருக்குகிறோம்.

தற்படத்தை நகல் எனப் பார்க்கவும், நகலுக்குச் சொந்தக்காரரான நாமே நிஜம் என்றும் பார்க்கவும் அவசியம் இல்லை. ஏனென்றால் இந்த உலகில் யாரும் நகலை விரும்புவதில்லை; அப்படி இருக்க, சுயநகலை மட்டும் ரசித்துக் கொண்டாடிப் பகிரவா போகிறார்கள்?

தன்னை விரும்பித் தன்னைப் பெருக்குபவன் தன்னில் இருந்து கடந்து சென்றுகொண்டே இருக்கிறான். அவன் தன் பிரக்ஞையின் பாரத்திலிருந்து விடுதலை கொண்டவன். சுயவிருப்பத்திலிருந்து, சுயபெருக்கத்திலிருந்து சுயவிடுதலையைப் பெற முடியாதபோது மட்டுமே அது துன்பமாகிறது. அது பெரும்பாலானோருக்கு நடப்பதில்லை. அதனால்தான் நாம் தற்படத்தை நோக்கிப் புன்னகைக்கிறோம். கண்ணீருடன் தற்படம் எடுத்தால்கூட அதைப் பின்னர் கண்டு புன்னகைக்கிறோம்.

நம்மையே தற்படத்தில் நாம் நோக்குவதும், பின்னர் அப்படி நோக்கிக்கொண்ட தற்படத்தைக் கண்டு நாம் புன்னகைப்பதும் எதைக் காட்டுகிறது? நாம் நம்மை இருவராய் பார்க்க விரும்புகிறோம் என்பதைக் காட்டுகிறது. ஒன்றிலிருந்து இரண்டாகப் பரிணமித்து, இரண்டிலிருந்து நான்காக, எட்டாகத் தொடர்ந்து பெருகிக்கொண்டிருக்கும் ஒருவர் ஒற்றை சுய பிம்பத்திலிருந்து தப்பிக்கிறார். தன் அசல் என தான் நம்பிய ஒன்றுடன் பிணைந்துகொள்ளாமல் பறந்து போகிறார். இது விடுதலை அல்லவா?

தற்படம் எடுப்பதை நான் ஆரோக்கியமான ஒன்றாகவே பார்க்கிறேன். அதை தன்னைப் பற்றிப் பேசுவது, தன்னை எழுதுவது, தன்னை நினைத்துப் பார்ப்பது, படைப்புப் பணியில் ஈடுபடுவது ஆகியவற்றுக்கு இணையாகவே (தரத்தில் அல்ல, நோக்கத்தில்) பார்க்கிறேன்.

தன்னை விரும்புகிறவனே கண்ணாடியில் முகம் பார்க்கிறான்; தன்னை விரும்புகிறவனே தன்னைப் பற்றிப் பேசவும் எழுதவும் செய்கிறான். தன்னை விரும்புகிறவனே படைப்பாளி ஆகிறான். தன்னை விரும்புகிறவனே தற்படமும் எடுக்கிறான். சமூகம் அங்கீகரித்தாலும் அங்கீகரிக்காவிட்டாலும் தன்னை விரும்புகிறவன் தொடர்ந்து தன்னை விரும்புவான்.

தன்னை விரும்புகிறவனே தன்னிலிருந்து விடுதலையும் பெறுகிறான்.

தற்படம் எடுங்கள்!

திங்கள், 24 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon