விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் எட்டு மாத கர்ப்பிணிக்கு எச்ஐவி பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்குத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடு செல்வதற்காக சிவகாசியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அரசு மருத்துமனையில் ரத்தப் பரிசோதனை செய்துள்ளார். அதில், அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக அந்த இளைஞர் தானம் செய்த ரத்தம், சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்குச் செலுத்தப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பணியின்போது மெத்தனமாகச் செயல்பட்ட ரத்த வங்கி ஊழியர்கள் மூன்று பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்விவகாரத்தை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்த செய்தியைப் பகிர்ந்து நேற்று (டிசம்பர் 26) கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “ரத்தம் கொதிக்கிறது. இந்த ஊழல் அரசின் கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன? உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனை ரத்தங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். குட்கா புகழ் அமைச்சர் விஜயபாஸ்கர் இனியாவது மக்கள் நல்வாழ்வுத் துறை பணிகளில் ஈடுபடுவரா?” என்று அரசு ரத்த வங்கிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள
அறிக்கையில், “கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 2016ஆம் ஆண்டே ரத்த தானம் செய்தவருக்கு எச்ஐவி பாதிக்கப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகும், சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரிவிக்கப்படாதது ஏன் என்ற கேள்வி வெறும் நிர்வாக பிரச்சினைதானா அல்லது தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
“வெளிநாடு செல்வதற்கான சோதனையில் கண்டறியப்பட்டதன் காரணமாகவே இந்தப் பிரச்சினை வெளிவந்துள்ளது. இல்லை என்றால் இன்னும் பலரும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கும். கர்ப்பிணிப் பெண், குழந்தை, அவர்களது குடும்ப வாழ்க்கை, சமூக நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று வேறு யாருக்கும் நிகழ்ந்திருக்கிறதா என்பதும் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ள பாலகிருஷ்ணன்,
தவறிழைத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடும், உரிய உயர் மருத்துவ சிகிச்சையும் தமிழக அரசு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், மருத்துவச் சேவைகளை தனியார் மயமாக்கும் முயற்சிகளைக் கைவிடவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், “சாத்தூரில் எச்ஐவி பாசிட்டிவ் ரத்தம் செலுத்தப்பட்டதால் கருவுற்ற பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பை எதனாலும் ஈடு செய்ய முடியாது. அவருக்கு சென்னை மருத்துவமனையில் உயர்தர மருத்துவத்தை அரசு செலவில் வழங்க வேண்டும். தவறு செய்தவர்களைக் கடுமையாக தண்டிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
“தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். உரிய உயர் மருத்துவ சிகிச்சை வழங்க அரசின் ஆணை வேண்டும்” என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.