பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜனவரி 14ஆம் தேதியன்று விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.
தைப்பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி, வரும் ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் விடுமுறை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், போகிப் பண்டிகை அன்று மாநிலம் முழுவதும் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதையொட்டி, வரும் ஜனவரி 14ஆம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 14ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி பணி நாளாகக் கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தமிழக அரசின் புதிய அறிவிப்பினால் ஜனவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தொடர்ந்து ஆறு நாள்கள் அரசு விடுமுறை கிடைத்துள்ளது. அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் இதனால் பெரிதும் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.