மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 11 ஜூலை 2020

ஜெ. மரண மர்மம்: திமுக ஆட்சியில் தண்டனை!

ஜெ. மரண மர்மம்: திமுக ஆட்சியில் தண்டனை!

“ஜெயலலிதா மரணம் மர்மம் குறித்து திமுக ஆட்சியில் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. புலிவலத்தில் கூட்டத்தைத் தொடங்கி வைத்து மக்கள் குறைகளைக் கேட்ட திமுக தலைவர் ஸ்டாலின், தொடர்ந்து நாஞ்சிக்கோட்டை, மாதாக்கோட்டை ஆகிய பகுதிகளில் நடந்தக் கூட்டங்களிலும் கலந்துகொண்டார்.

நாஞ்சிக்கோட்டை ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “கலைஞர் முதல்வராக இல்லாமல் எதிர்க்கட்சியில் இருந்துதான் மறைந்தார். இன்றுவரை அவருக்கு நாங்கள் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறோம். கலைஞர் மருத்துவமனையில் இருந்தபோது, அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது அறிக்கை வெளியிட்டிருந்தோம். ஆனால், முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவு இன்னும் மர்மமாகவே இருக்கிறது. மறைவுக்கு ஓபிஎஸ் காரணமா, ஈபிஎஸ் காரணமா, டிடிவி காரணமா என்ற பிரச்சாரம்தான் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. சிபிஐ விசாரணை கேட்டிருந்த நிலையில், இதனால் உண்மை வெளிவந்துவிடும் என்பதால் தங்களுக்கு வேண்டிய ஒரு நீதிபதியை நியமித்து விசாரணை ஆணையம் அமைத்தனர். விசாரணை ஆணையம் நடத்தும் நாடகத்திலேயே இவ்வளவு குழப்பங்கள் இருந்துகொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

கலைஞர் மறைவுக்குப் பிறகு அவருக்குத் தொடர்ந்து புகழஞ்சலிக் கூட்டங்கள் நடைபெற்றதாகக் கூறிய ஸ்டாலின், “ஜெயலலிதா முதல்வராக இருந்து மறைந்தவர். அவர் மீது பாசம் உள்ளது போல அம்மா, அம்மா என்று உருகும் அதிமுகவினர், இதுவரை அவருக்கு ஓர் இரங்கல் நிகழ்வு நடத்தியுள்ளார்களா? ஜெயலலிதா சிறை சென்றபோது அழுது கண்ணீர்விட்டவர்கள், இறந்ததற்குப் பிறகு சிரித்துக்கொண்டே பதவியேற்றுக் கொண்டார்கள். இப்படித்தான் இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது” என்றும் விமர்சித்தார். மத்திய, மாநில ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்போது, அது திமுக ஆட்சியின் தொடக்க புள்ளியாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து மாதாக்கோட்டையில் நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது உடல்நிலை குறித்து தெளிவான அறிக்கைகள் வழங்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவில் மர்மம் உள்ளது. அதற்கு யார் காரணம் என்றாலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களைச் சிறையில் அடைப்போம்” என்று தெரிவித்தார்.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon