மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 12 ஜூலை 2020

யானைகளைக் கொன்ற அரசியல் ஆட்டம்!

யானைகளைக் கொன்ற அரசியல் ஆட்டம்!

மேகமலையின் மீதொரு பயணம்! பகுதி - 7

நரேஷ்

பல்வேறு விதிமுறைகளை மீறி மேகமலைக்குச் சாலை அமைக்கப்பட்டது யாருக்காக?

இந்தக் கேள்விக்கான பதிலாக அரசு வழங்கும் தகவல், ‘மேகமலையின் மேல் இருக்கும் மக்களுக்காக அமைக்கப்பட்ட சாலை இது’ என்பதுதான்.

இவ்வளவு விதிமுறை மீறல்களும் கண்டுகொள்ளப்படாதது ஏன்?

இந்தக் கேள்விக்கான பதிலாக அரசு வழங்காத தகவல், ‘மேகமலையின் மேல் இருக்கும் தேயிலைத் தோட்டங்களுக்காக அமைக்கப்பட்ட சாலை இது’ என்பதுதான்.

மேகமலையின் மேல் இருக்கும் தேயிலைத் தோட்டங்கள் யாருடையவை?

இந்தக் கேள்விக்கான பதிலை நாம் நேரடியாகக் கண்டோம். மேகமலையின் மேல் இருக்குக் ஹைவேவிஸ் அரசாங்க விடுதியில், மேகமலையில் இருக்கும் தேயிலைத் தோட்டங்களுக்காக பங்காளி சண்டை நடந்தது. சசிகலா, தங்க தமிழ்ச்செல்வன் போன்ற ஆளும்கட்சியைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளின் ஆதரவாளர்களுக்கு மத்தியில் நடக்கும் சண்டை என்பதை அவர்களின் கோஷங்களே காட்டிக் கொடுத்தன.

நாம் கீழிறங்கும்போது, கூடவே இறங்கின இருபது கார்கள். அவை அனைத்தும் கட்சிக் கரைக்கொடியுடன் கடந்து சென்றன. கூடவே பல விடைத் தெரியாத கேள்விகளுக்கான பதிலையும் கடத்திச் சென்றன.

இவ்வளவு காலம் கிடப்பில் கிடந்த இந்தச் சாலை அமைக்கும் திட்டம், கடந்த ஒரு வருடத்தில் நடத்தி முடிக்கப்பட்டதற்கான காரணம், கடந்த ஒரு வருடம் நம்மை ஆண்டவர்கள் மேகமலை தேயிலைத் தோட்டங்களை ஆள்பவர்களாக இருப்பதால்தான். நாம் மலையின் பாதையில் பயணித்தபோது, பல்வேறு சரக்கு லாரிகளும் உடன் பயணித்தன. அவை நிச்சயமாக அம்மலை மக்களின் வாகனங்கள் அல்ல. அம்மலை மக்களுக்காக மேலே சென்று வந்த வாகனமும் அல்ல. ஏனென்றால் அவ்வளவு பெரிய வண்டியில் ஏற்றும் அளவுக்கான பொருளை வைத்திருக்கும் பொருளாதாரம் அவர்களிடம் இல்லை. எனவே, அவை தேயிலைத் தோட்டங்களின் வாகனங்கள்தான் என்பதைத் தாராளமாக உறுதி செய்துகொள்ளலாம்.

“அரசாங்கப் புறம்போக்கு நிலத்தைத் தவிர ஒரு காணி நிலத்தைக்கூட சாலை அமைப்பதற்குப் பயன்படுத்தக்கூடாது” என்பது தேசிய பசுமை தீர்ப்பாயம் வகுத்த விதி.

ஆனால், இரண்டு சரக்கு லாரிகள் ஒரே நேரத்தில் நகர்ந்து செல்லும் அளவுக்கு நெடிய சாலையை மலையைக் குடைந்து அமைத்திருக்கிறார்கள்.

“ஒரே ஒரு புல்கூட தேவையில்லாமல் அகற்றப்படக் கூடாது” என்பது விதி.

சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்ட மரங்களின் எச்சமும், சாலை விரிவாக்கத்தால் சரிந்த மரங்களின் எண்ணிக்கையும் இன்று சென்றாலும் அதிரவைக்கும் புள்ளிவிவரங்கள். சாலைதோறும் சரிந்திருக்கும் மரங்களைப் பார்க்கலாம். சாலைகளைக் கடக்க முடியாமல் திணறும் அரிய வகைக் கருங்குரங்குக் குட்டியையும் காணலாம்.

“வனத்தில் வாழும் எந்த தாவர விலங்கின வகைகளுக்கும் சிறு தொந்தரவும் ஏற்படுத்தக் கூடாது” என்பது மிக முக்கியமான விதி.

வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட பாறைகளாலும், சாலை அமைக்கப்பட்டதால் வழிமாறிய 70க்கும் மேற்பட்ட சிற்றோடைகளாலும் இன்றும் இறந்துகொண்டிருக்கும் உயிரினங்களின் எண்ணிக்கை கணக்கில் அடக்க முடியாது. நாம் செல்லும்போதுகூட சாலையில் அடிபட்டு நசுங்கிக் கிடந்த சிற்றுயிர்கள் சிலவற்றைக் கண்டு, கடந்து சென்றோம்.

இந்த விதிமீறல்களின் விளைவு என்ன தெரியுமா?

(பயணிப்போம்…)

முந்தைய பகுதிகள்:

பகுதி - 1 : யானைகளுக்கு என்னதான் ஆயிற்று?

பகுதி - 2 : அந்தச் சாலையில் என்ன நடக்கிறது?

பகுதி - 3 : யானையைக் கொல்லும் கண்ணாடித் துண்டு!

பகுதி - 4 : தேயிலைத் தோட்டங்களால் பலியாகும் வன உயிர்கள்!

பகுதி - 5 : வனத்தைப் பாதுகாக்கப் போதிய ஆட்கள் இல்லை!

பகுதி - 6 : விதிகளுக்கு எந்த மதிப்பும் இல்லை!

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon