மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

வயதானவர்களின் எண்ணிக்கை 20% அதிகரிக்கும்!

வயதானவர்களின் எண்ணிக்கை 20% அதிகரிக்கும்!

அடுத்த மூன்று பத்தாண்டுகளில் இந்தியாவின் தென்னிந்திய மாநிலங்களில் வயதானவர்களின் எண்ணிக்கை 20 சதவிகிதமாக அதிகரிக்கும் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஜனவரி 7 அன்று ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டது. அதில், 2050ஆம் ஆண்டுக்குள், மொத்த மக்கள்தொகையில், வயதானவர்களின் எண்ணிக்கை 20 சதவிகிதமாக அதிகரிக்கும். மொத்தமாக, 178 கோடி பேர் 2050ஆம் ஆண்டில் 65 வயதைக் கடந்தவர்களாக இருப்பார்கள் எனக் கணிக்கப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாக பார்க்கும்போது, 65 வயதை தாண்டியவர்கள், தமிழ்நாட்டில் 20.5 சதவிகிதமும், கர்நாடகாவில் 24.6 சதவிகிதமும், கேரளாவில் 25 சதவிகிதமும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் 30 சதவிகிதமும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, வடக்கு மற்றும் கிழக்கு பகுதியிலுள்ள இளைஞர்களைத் தென்மாநிலங்களுக்கு வருவதற்கு ஊக்குவிப்பாக அமையும். அதிகரித்து வரும் குடியேற்ற போக்கு மாநிலங்களின் தற்போதைய சமூக மற்றும் உள்கட்டமைப்பில் அழுத்தம் கொடுக்கும். இது தெற்கு மற்றும் வடக்கு மாநிலங்களுக்கு இடையேயான வருவாய் விநியோக இடைவெளியே மேலும் விரிவுபடுத்தும். தெற்கு மாநிலங்களின் தனிநபர் வருமானம் வடக்கு பகுதிகளுடன் ஒப்பிடும்போது கணிசமாக அதிகமாக உள்ளது. இதனால், தெற்கு மாநிலங்களில் மிதமான மக்கள்தொகை வளர்ச்சியுடன், தனிநபர் வருமான இடைவெளி இன்னும் விரிவாக்கப்படக் கூடும்.

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பிகார், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் முறையே 25.1, 22.6 மற்றும் 22.3 சதவிகிதம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் உள்ளது. இதை ஒப்பிடும்போது, தெற்கு மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசத்தில் 11.1 சதவிகிதம் குறைவான மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் உள்ளது.

குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, சேமிப்பை மட்டுப்படுத்த வாய்ப்புள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon