மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

அமித் ஷாவிடம் நடந்த விசாரணை!

அமித் ஷாவிடம் நடந்த விசாரணை!

பாஜக தலைவர் அமித் ஷா ஆர்எஸ்எஸ். அமைப்பின் அழைப்பின் பேரில் அவசரமாய் சென்னை வந்து ஜனவரி 8 ஆம் தேதி ஆலோசனையில் கலந்துகொண்டு அன்றே டெல்லி திரும்பிவிட்டார்.

2019 ஆம் ஆண்டுக்கான செயல்திட்டங்களை வகுப்பது பற்றி ஜனவரி 5 ஆம் தேதி முதல் சென்னையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இதயக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமித் ஷாவிடம் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட நிர்வாகிகள் விரிவான விவாதத்திலும், விசாரணையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று சங்க வட்டாரங்களிலும், பாஜக வட்டாரங்களிலும் பேசப்படுகிறது.

“சென்னை கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷாவிடம் மோடி அரசின் மீதான பல்வேறு வகையான கருத்துகள் பற்றி விவாதிக்கப்பட்டன. அடுத்த முறை மக்களை அணுகும் முறை பற்றியும் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமித் ஷா, கடந்த ஐந்து வருடங்களாக நாம் ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இவற்றை அடிப்படையாக வைத்து மோடி, மோடி அரசு செய்த நன்மைகள் என்ற அடித்தளத்தில்தான் நாம் மக்களை அணுக முடியும்,

மோடி அல்லாத இன்னொருவரை முன் வைத்து நாம் பிரசாரம் செய்தால், மோடி அரசின் மீதான செயல்பாடுகளை நாமே புறக்கணித்தது மாதிரி ஆகிவிடும். அது தேர்தல் களத்தில் நமக்கு பின்னடைவைக் கூட தரலாம். மேலும் மோடியின் மீது ஏற்பட்டுள்ள ஈர்ப்பால் பல்வேறு மாநிலங்களில் நம் கட்சி வளர்ந்து வருகிறது. இந்நிலையில் அவரை தனி நபராக பார்க்காமல் கட்சியை வளர்க்கும் ஒரு கேந்திரமாக பார்க்கலாம் என்று அமித் ஷா தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் கூட்டணி பற்றியும் பேசப்பட்டுள்ளது. சில மணி நேரங்கள் அமித் ஷா இந்த விவாதத்தில் பங்கேற்றார்’ என்று தெரிவித்தனர்.

8 ஆம் தேதி காலை அமித் ஷாவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழிசையுடன் மாநில விவகாரங்கள் பற்றி சில நிமிடங்கள் பேசியிருக்கிறார் அமித் ஷா. ஆர் எஸ் எஸ் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்ற நிலையில் அவரைப் பார்க்க ஆடிட்டர் குருமூர்த்தி சென்றிருக்கிறார். ஆனால் கூட்டத்தில் தீவிரமாக இருந்த காரணத்தால் குருமூர்த்தியால் அமித் ஷாவை உடனடியாக சந்திக்க இயலவில்லை. கூட்டம் முடிந்ததும் இதுகுறித்து அறிந்த அமித் ஷா ஆடிட்டர் குருமூர்த்தியை அழைத்து தன்னுடனே விமானத்தில் டெல்லி வருமாறு கூறியிருக்கிறார். அதன்படி அமித் ஷா சென்னையில் இருந்து டெல்லி திரும்புகையில் ஆடிட்டர் குருமூர்த்தியும் அவருடன் விமானத்தில் சென்றிருக்கிறார்.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon