மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

கட்டப் பஞ்சாயத்து அல்ல, தீர்வுக்கான பேச்சுவார்த்தை!

கட்டப் பஞ்சாயத்து அல்ல, தீர்வுக்கான பேச்சுவார்த்தை!

தேன்ராஜ், பிரகாசு

(புரட்சியாளர்களின் கட்டப் பஞ்சாயத்து! என்ற தலைப்பில் 7.1.2019 அன்று மின்னம்பலத்தில் காலை 7 மணிப் பதிப்பில் வெளியான தேவிபாரதியின் கட்டுரைக்கான எதிர்வினை...)

முதலில் கட்டுரையில் உள்ள சில தவறுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். “ஐந்தாண்டுகளுக்கு முன்னால் தர்மபுரி நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் ஆதிக்கச் சாதியினரால் படுகொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டபோது அவரது மனைவியான இளவரசி மௌனமாக இருந்தார்” என்று காலை 7.00 மணிப் பதிப்பில் முதலில் வெளியானது. மதியம் 1.00 பதிப்பில் வித்யா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டார். இரண்டுமே தவறு. மாலை 7.00 பதிப்பில்தான் இளவரசனின் மனைவி திவ்யா என்று சரியாகக் குறிப்பிடப்பட்டது.

“மூன்றாண்டுகளுக்கு முன்னால் திருச்செங்கோட்டில், நாமக்கல் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த தலித் இளைஞரான கோகுல் ராஜ் படுகொலை செய்யப்பட்டார்” என்று கூறப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டு அவரது சடலம் கிடந்த இடம் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகேயுள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளம். கோகுல்ராஜின் சொந்த ஊர்தான் ஓமலூர். ஓமலூர் இருப்பது சேலம் மாவட்டத்தில்.

இவையிரண்டும் பெரிய தவறில்லை என்றாலும் தமிழகத்தையே உலுக்கிய முக்கியப் படுகொலைகளில்கூடத் தவறான தகவல்கள் பதிவிட்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

கொளத்தூர் மணி பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் என்று கூறப்பட்டுள்ளது. கட்டுரையாளர், ‘கட்டப் பஞ்சாயத்து’ என்று சொல்லுகிற, அந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையின் பிறகு வெளியான அறிக்கையை எள்ளளவும் படிக்கவில்லை என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த அறிக்கையில் மிகத் தெளிவாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி என்றும், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தியாகு என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இப்போது நமது விவாதத்துக்கு வருவோம்..

“கௌசல்யா தனது கணவரின் படுகொலையைத் தனக்கேற்பட்ட தனிப்பட்ட இழப்பாகக் கருதாமல் அதைச் சாதிய வன்முறையாகப் பார்த்தார், சங்கரின் படுகொலைக்குக் காரணமான தன் உறவினர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுத் தந்ததற்கு அப்பால் சங்கரின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி சாதி ஆணவப் படுகொலைகளுக்கெதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டார்” என்று கட்டுரையாளரே குறிப்பிட்டுள்ளார். உண்மைதான்.

தனது காதல் கணவர் சாதி வெறி ஆணவத்துக்குப் படுகொலையான பின்னர், மற்ற பெண்களைப் போல கௌசல்யாவும் வீட்டுக்குள் முடங்கிவிடாமல் புரட்சிகர பெண்ணாய் உருவானதற்கு தமிழகத்தில் இருக்கிற அம்பேத்கரிய, பெரியாரிய மற்றும் மார்க்சிய முற்போக்கு இயக்கங்கள் பலவற்றுக்கும் பங்கு உண்டு. தனித்து எந்த அமைப்பையும் சொல்வது நியாயமாய் இருக்காது. சிலருக்குக் கூடுதல் பங்கும், சிலருக்குக் குறைவான பங்கும் இருந்திருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட கொடுமையான பாதிப்பிலிருந்து ஒரு பெண் மீண்டு வந்து மறுமணத்துக்கான தனது இணையரையும் தானே தேர்ந்தெடுத்துக்கொண்டார் என்ற மகிழ்ச்சிதான் அவரது மறுமணத்தின்போது இங்கு அனைவருக்கும் (மேற்கூறிய அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய இயக்கங்களுக்கு) இருந்தது.

சக்தி மீதான குற்றச்சாட்டுகள் யாவும் திருமணத்துக்கு முன்பே குற்றம்சாட்டப்பட்டவர்களால் கௌசல்யாவிடம் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. சக்தியை கௌசல்யா மறுமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறார் என்பது சக்தியால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு முன்பே தெரிந்திருக்கிறது. ஆனால், மறுமணத்தைச் செய்து வைத்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடமோ அல்லது தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணனிடமோ பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த இன்னலை சக்தி - கௌசல்யாவின் மறுமணத்துக்கு முன்பு கூறவில்லை. பொதுவெளியிலும் எங்கும் அறிவிக்கவில்லை. காவல் நிலையத்திலும் புகார் அளிக்கவில்லை. எனவே அவர்கள் மறுமணம் செய்வதில் முழு உடன்பாடுடையவர்களாகத்தான் இரு தலைவர்களும் இருந்தார்கள்.

திருமணத்துக்குப் பிறகுதான் இந்தப் புகார்கள் பொதுவெளிக்கு வந்தன. அதன் பின்னர்தான் பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பிலிருந்தும், சக்தி - கௌசல்யா தரப்பிலிருந்தும் பிரச்சினையைப் பேசித் தீர்த்துக்கொள்வது என முடிவெடுத்து, கொளத்தூர் மணியை அணுகியுள்ளனர். கட்டுரையாளர் அந்த அறிக்கையைப் படித்திருந்தால் முதல் வரியிலேயே இது தெரிந்திருக்கும்.

அந்த முதல் பத்தியை இங்கே தருகிறோம்.

“சக்தி - கௌசல்யா திருமணத்துக்குப் பின் சக்தி மீது எழுந்த குற்றச்சாட்டுகளும் அவை குறித்து சமூக ஊடகங்களில் இடம் பெற்ற கருத்துகள், எதிர்க் கருத்துகளும் கவலைக்குரிய முறையில் வளர்ந்து சென்றுகொண்டிருந்த நிலையில், அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசித் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் (ததேவிஇ) பொதுச் செயலாளர் தோழர் பாரதி மற்ற நண்பர்களையும் இணைத்துக்கொண்டு முன்முயற்சி செய்தார். அவர்கள் இந்தச் சிக்கலில் முதன்மைத் தொடர்புள்ள இரு தரப்பினரிடமும் ஒப்புதல் பெற்று, ததேவிஇ தலைமைக்குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் - விடுதலைக் கழகத் தலைவர், கொளத்துர் தா.செ.மணி ஆகிய எங்கள் இருவரிடமும் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தனர்” என்பது அறிக்கையின் தொடக்கம்.

கௌசல்யாவோ, சக்தியோ அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணோ திராவிடர் விடுதலைக் கழகத்தில் அடிப்படை உறுப்பினர்கள்கூட அல்ல. எனவே, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி இந்தப் பேச்சுவார்த்தையில் இணைக்கப்பட்டதற்குப் பின்னால் இந்த மறுமணத்தை நடத்தி வைத்தவர்களில் ஒருவர் என்ற காரணத்தைத் தாண்டி வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

மறுமணத்தைச் செய்து வைத்தவரிடம், மறுமணம் செய்த நபர் மீது புகார் தெரிவிப்பதும், அந்தப் பிரச்சினையைப் பேசித் தீர்த்துக்கொள்வதும் எந்த வகையில் கட்டப் பஞ்சாயத்து ஆகும்? கட்டாயப் பேச்சுவார்த்தையோ அல்லது கட்டாய உடன்படிக்கையோ பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது வலிந்து திணிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண் சட்டப்படி எந்த நடவடிக்கைக்கும் செல்வதில்லை என்பதில் மிக உறுதியாக இருந்தார். அவரைப் பொறுத்தவரையில் அவரை ஏமாற்றிய சக்தியைப் பொது வெளியில் அம்பலப்படுத்த வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கமாக இருந்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கட்டப் பஞ்சாயத்து செய்தார் என்று பாதிக்கப்பட்ட பெண் எங்காவது கூறினாரா, அல்லது கட்டுரையாளருக்கு ஏதேனும் சிறப்புத் தகவல் அளித்தாரா என்பதை விளக்கினால் நன்று.

தேவிபாரதி அந்த அறிக்கையைப் படிக்கவே இல்லை என்பதை மீண்டும் மீண்டும் கூற வேண்டியிருக்கிறது. சமூக வலைதளங்களில் எடுக்கப்பட்ட வாந்திகளைச் சேகரித்து கட்டுரையில் வெள்ளமாய் ஓடவிட்டிருக்கிறார். “சக்தி தன் மீதான பாலியல் அத்துமீறல் பற்றிய குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார். தியாகு - கொளத்தூர் மணியின் புரட்சிகர நீதிமன்றம் அதை அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டதுபோல் தெரிகிறது” என்று கூறியிருக்கிறார்.

இதற்கு அந்த அறிக்கையிலிருந்தே பதிலை அளிக்கிறோம். “அந்தப் பெண்ணுக்கு மோசமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அநீதிக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர் சக்தி. பொது அவையிலும் அந்தப் பெண் தொடர்பாகத் தன் மீதான குற்றச்சாட்டினை சக்தி ஒப்புக்கொண்டார். கௌசல்யாவும் தன் பிழையைப் புரிந்து ஒப்புக்கொண்டார்” என்றும், “தனது ஆற்றலை வியப்புடன் மதிப்போரை அதனைக் கொண்டே மடக்கும் போக்கு சக்தியிடம் இருந்து வந்துள்ளதை ஊகிக்க முடிகிறது. பொதுவாழ்வில் பாலின பேதமற்று செயல்படும் ஆர்வத்தோடு வரும் பெண்களுக்கு இவ்வகைப் போக்கு பெரும் தடையாகும் என்பதும் - பொதுவாழ்வில் இயங்கும் பெண்கள் மீதான பொதுப்புத்தியில் உள்ள அவநம்பிக்கையை அது மேலும் அதிகப்படுத்தும் என்பதும் – பல்வகைத் தடைகளைத் தாண்டி சமூகப் பணியாற்ற வரும் பெண்களுக்கு குடும்பத்தில் நிலவும் கட்டுப்பாடுகள் மேலும் மேலும் இறுகும் என்பதுமே மெய்ந்நிலையாகும்” என்றும் அந்த அறிக்கையில் தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

“விசாரணை எங்கே, எப்போது நடந்தது? யார் யாரெல்லாம் விசாரிக்கப்பட்டார்கள்? பாதிக்கப்பட்டவர்கள் தரப்பின் சார்பாக யார் வாதாடினார்கள்? சாட்சியங்களோ, தடயங்களோ ஆராயப்பட்டனவா? எந்தச் சட்டத்தின் அல்லது சமூக நீதியின் கீழ் இந்த விசாரணை நடத்தப்பட்டது?” என்று கேட்டிருக்கிறீர்கள். அதற்கும் எங்கள் பதில் அந்த அறிக்கையைப் படியுங்கள் என்பதுதான். அதில் இதற்கான விடை இருக்கிறது.

“ஒப்புக்கொள்ளப்பட்ட, நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்காக சக்திக்கு மூன்று லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதோடு சக்தி ஆறு மாத காலத்துக்குப் பறை இசைக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தியாகு - கொளத்தூர் மணியின் புரட்சிகர அறத்தைக் கேலிக்கூத்தாயிருப்பது இந்தத் தீர்ப்புதான்” என்று கட்டுரையாளர் தேவிபாரதி கூறியிருக்கிறார்.

சக்தி இனி பறையிசைக்கக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தவரே பாதிக்கப்பட்ட அந்தப் பெண்தான். வாழ்நாள் முழுவதும் சக்தி பறையிசைக்கக் கூடாது என்று சொல்வதற்கு நீதிமன்றங்களுக்கே உரிமை இல்லை. அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பிலிருந்து பேசியவர்கள் சக்தி தனது குற்றச்சாட்டை உணருவதற்கான கால அவகாசமாக ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை பொது நிகழ்ச்சிகளில் பறையிசைக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்கள். அதனடிப்படையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதே ஒழிய கொளத்தூர் மணியோ, தியாகுவோ தனித்து முடிவெடுக்கவில்லை. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டுமென்பதில், கொளத்தூர் மணி தனது மாற்றுக் கருத்தாக 2 லட்ச ரூபாய் வழங்கினால் போதுமானது என்று கூறியுள்ளார். ஆனால், பாதிக்கப்பட்ட பெண் இரண்டையும் மறுத்துவிட்டு தனக்குப் பணம் வேண்டாமென்று சென்றுவிட்டார். எனவே அதைப் பேசுவதும் தேவையற்றது.

“தனது தனிப்பட்ட வாழ்க்கையைத் தனது சொந்த வழியில் எதிர்கொள்ள கௌசல்யா அனுமதிக்கப்பட வேண்டும்” என்று கட்டுரையாளர் தனது எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கு கௌசல்யாவுக்குத் தகுதியுண்டு என்று கட்டுரையாளர் கூறுகிறார். அதற்கு கௌசல்யாவுக்கு மட்டும்தான் முழு உரிமையுண்டு என்று நாங்கள் கருதுகிறோம். கௌசல்யாவின் நெருங்கிய நண்பர்களும், சக்தியால் பாதிக்கப்பட்ட பெண்களும், சக்தியைத் தனது மறுவாழ்வின் துணையாக ஏற்றுக்கொள்ளும் கௌசல்யாவின் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவர் மீதான அன்பால் கேட்டுக்கொண்டார்கள் என்றும், கௌசல்யா உறுதியாக மறுத்துவிட்டுத் தனது சொந்த வழியில்தான் சக்தியை மணக்க முடிவெடுத்தார் என்பதும் எங்களுக்குக் கிடைத்த தகவல்.

ஆணவப் படுகலைகளுக்கு எதிரான போராட்டத்தில், அந்த வரலாற்றில் தனது இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்தவர் கௌசல்யா என்பதை யாராலும் மறுக்க இயலாது. மறுமணம் நடந்ததற்குப் பின்னால் கௌசல்யாவின் மீது சாதி வெறியர்களாலும், மத வெறியர்களாலும் கட்டவிழ்த்து விடப்பட்ட வசைபாடுகளுக்கும், இழிவான வார்த்தை தாக்குதல்களுக்கும் எதிராகவோ அல்லது கௌசல்யாவின் மறுமணத்தை ஆதரித்தோ இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்பாகவே கட்டுரையாளர் தேவிபாரதி இதுபோன்று வெகுண்டெழுந்து எழுதியதாகத் தெரியவில்லை. ஒருவேளை எழுதியிருப்பார் என்றால் சாதி ஒழிப்புக் களத்தில் அவரின் பணியை மெச்சுகிறோம். ஆனால், அப்போது தனது நிலையை வெளிப்படுத்தாமல் இப்போது மட்டும் முந்திக் கொண்டு வந்திருப்பார் என்றால் அவருடைய உள்நோக்கத்தையும் சேர்ந்தே உணர்ந்துகொள்கிறோம்.

திராவிட இயக்கங்களின் மீதும், அதன் சித்தாந்தத்தின் மீதும், அதன் தலைவர்களின் மீதும் (பெரியார் காலம் தொட்டே) எப்போதுமே தனிப்பட்ட விமர்சனங்களையும், வசைபாடுகளையும் வைக்கிற மத வெறியர்களுக்கும், சாதி வெறியர்களுக்கும், போலித் தமிழ் தேசியர்களுக்கும் இந்தப் பேச்சுவார்த்தை எப்படித் தீனியாக அமைந்ததோ அதுபோலவே அவருக்கும் அமைந்திருக்கும் என்று எடுத்துக்கொள்கிறோம்.

எதன் மீதும், எப்போதும் விமர்சனங்களை வைக்க யாருக்கும் முழு உரிமையுண்டு. விமர்சனங்களை வைப்பதற்குத் தனி மனிதனுக்குத் தகுதியை வரையறை செய்யும் பழக்கம் திராவிட இயக்கத்துக்குக் கிடையாது. விமர்சனங்களைக் கண்டு அஞ்சுவதும் கிடையாது. ஆரோக்கியமான விமர்சனங்களை எப்போதும் வரவேற்கிறோம். பதில் சொல்லவும் துணிந்திருக்கிறோம். இந்த விமர்சனத்தை வைக்கும் முன் அதற்கான அடிப்படைத் தகுதியாக அந்த அறிக்கையைக் கட்டுரையாளர் படித்திருக்க வேண்டும் என்பதை மட்டும் கூறிக்கொள்ள விழைகிறோம்.

(கட்டுரையாளர்கள் : தேன்ராஜ் - திராவிடர் விடுதலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம் மற்றும் மாத இதழான நிமிர்வோம் ஆகியவற்றின் பொறுப்பாளர், திருவான்மியூர் பகுதி அமைப்பாளர். பிரகாசு - திராவிடர் விடுதலைக் கழகம்.)

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon