மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

வெற்றி விழா சர்ச்சை: மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா

வெற்றி விழா சர்ச்சை: மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா

கனா படத்தின் வெற்றி விழாவில் ஓடாத படங்களுக்கு வெற்றி விழா கொண்டாடுகின்றனர் என்று பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கினார். ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்தார். டிசம்பர் 21ஆம் தேதி கடும் போட்டிக்கு நடுவே குறைவான திரையரங்குகளில் வெளியானது. ஆனால், படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உருவாகிய நிலையில் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமானது. படத்தின் வெற்றி விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அத்துடன் , “இதுதான் உண்மையான வெற்றிப் படம். சில படங்கள் ஓடுகிறதோ, இல்லையோ... வெற்றி விழா கொண்டாடுகிறார்கள்” எனக் கூறினார். இதனால் அரங்கில் இருந்தவர்கள் வெடித்துச் சிரித்தனர். அதன்பின் தொடர்ந்த ஐஸ்வர்யா, “நான் உண்மையைத் தான் சொல்லியிருக்கிறேன். பொய் சொல்லவில்லை” என்று முடித்தார்.

ஐஸ்வர்யாவின் இந்தப் பேச்சு தமிழ்த் திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமீப காலமாக பல படங்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியது போல் வெற்றி விழா கொண்டாடப்பட்டுள்ளது. இருப்பினும் ஐஸ்வர்யா ராஜேஷ் யாரையும் குறிப்பிட்டு சொன்னாரா, திரைத் துறைக்குள் நடப்பதைப் பொதுவெளியில் ஏன் இப்படிப் பேசினார் என்பதாக இது பற்றிய விவாதங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். “ஹாய்.. கனா வெற்றி விழாவில் நகைச்சுவைக்காகப் பேசினேன். எந்தத் திரைப்படத்தையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நான் எப்போதும் யாரையும் புண்படுத்த மாட்டேன். அனைத்துப் படங்களும் பெரிய வெற்றி பெற வேண்டும் எனப் பிராத்திக்கிறேன். ஒரு படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக்குவது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். எனது கருத்து யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon