மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

சிறை தண்டனை: முன்னாள் அமைச்சர் மேல்முறையீடு!

சிறை தண்டனை: முன்னாள் அமைச்சர் மேல்முறையீடு!

மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று (ஜனவரி 9) மேல்முறையீடு செய்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நடைபெற்ற போராட்டத்தின்போது பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாக விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 10,500 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது,

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க முடியாது என்பதால், ஜனவரி 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்ட அன்றே அமைச்சர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சார்பாக அவரது வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அந்த மனுவில், “தங்கள் தரப்புக்கு போதுமான அவகாசம் அளிக்கப்படவில்லை, தங்களை முறையாக விசாரிக்கவில்லை, தாங்கள் கேட்ட ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லை, இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து மாற்றப்பட்ட நிலையில், அங்கே வழக்கு நடைபெற்ற குறிப்பையும், வழக்கறிஞரின் முந்தைய வாதத்தையும் எங்கள் தரப்புக்கு அளிக்கவில்லை, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தவும் தங்கள் தரப்புக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது,

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon