மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு: மாநிலங்களவையிலும் நிறைவேறியது!

 பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு:  மாநிலங்களவையிலும் நிறைவேறியது!

பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையைத் தொடர்ந்து நேற்று ஜனவரி 9ஆம் தேதி இரவு மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் இந்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் நேற்று சுமார் பத்து மணி நேர விவாதத்துக்குப் பின் மாநிலங்களவையில் இரவு 10 மணி வாக்கில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

மசோதாவுக்கு ஆதரவாக 165 வாக்குகளும், எதிராக ஏழு வாக்குகளும் பதிவான நிலையில் மசோதா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் மக்களவையில் இம்மசோதாவுக்கு ஆதரவாக 323 ஓட்டுகளும், எதிராக 3 ஓட்டுகளும் பதிவாயின என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக உறுப்பினர்கள் இந்த மசோதாவை எதிர்த்து வெளிநடப்பு செய்தனர். திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மியை சேர்ந்த உறுப்பினர்கள் இந்த மசோதா நாடாளுமன்றத் தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரி, அதற்கான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றனர். திமுக எம்.பி. கனிமொழி கொண்டுவந்த தீர்மானத்துக்கு 18 வாக்குகள்தான் ஆதரவாக விழுந்தன.

இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய சமூக நீதி அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் விவாதத்துக்குப் பதிலளிக்கையில், “இந்த சட்டத் திருத்தத்தால் ஏற்கனவே இருக்கும் சமூக ரீதியிலான இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் வராது” என்றார்.

முன்னதாக நடந்த விவாதத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.

காங்கிரஸ் ஆனந்த சர்மா பேசுகையில், “அரசியல் சட்டத்தின் 15, 16ஆவது பிரிவுகள் பிற்படுத்தப்பட்டோர், நலிந்த நிலையிலுள்ளோருக்காக உள்ளன. கடந்த காலங்களில் இதேபோன்ற பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு அளிக்கும் முயற்சி இருமுறை நடந்திருக்கிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த முயற்சியை முறியடித்திருக்கிறது. இது பல்வேறு மாநிலங்களிலும் நடந்திருக்கிறது. காங்கிரஸ் இதை ஆதரித்தாலும், ஆளுங்கட்சி சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் கொண்டுவரப்பட்டிருக்கும் முறை, நேரம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அரசு போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தராத வரையில் இதுபோன்ற பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டால் பலதரப்பட்ட மக்கள் பயன்பெறுவது கேள்விக் குறிதான். இந்த மசோதாவுக்கு காட்டிய அதே அக்கறையை பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவின் மீதும் இந்த அரசு காட்ட வேண்டும்” என்றார் ஆனந்த் சர்மா.

காங்கிரஸ் உறுப்பினர் கபில் சிபல் பேசுகையில், “இந்த மசோதா அரசு முழு மனதோடு ஆழ்ந்து கொண்டுவரப்பட்டது போல தெரியவில்லை, இரண்டாவது விஷயம் இந்த மசோதா நீதிமன்றத்தின் கண்காணிக்கும் கடிவாளத்துக்கும் உட்பட்டது, மூன்றாவதாக இந்த மசோதா நடைமுறைப்படுத்தப்படும் முறை பற்றி எந்தத் தெளிவும் இல்லை” என்று குறிப்பிட்டார்.

திமுக உறுப்பினர் கனிமொழிக்கு 5 அல்லது 7 நிமிடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த மசோதாவை எதிர்த்து கடுமையாக உரையாற்றினார். சபாநாயகரின் தடையை மீறி 14 நிமிடங்கள் உரையாற்றினார் கனிமொழி.

“அரசியல் சட்டத்தைத் திருத்துகிற இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள நிலைக் குழுவுக்கோ, தேர்வுக் குழுவுக்கோ அனுப்பப்படாமல் ஒரே இரவில் நாட்டின் மீது திணிக்கப்படுவதாக இருக்கிறது. இதுதான் அரசியல் சட்டத்துக்கு இன்று நேர்ந்திருக்கிறது. அரசாங்கம் என்ன நினைத்தாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடுதான் இது.

நான் சமூக நீதிக்கென நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைப் பெற்றிருக்கும் பெரியாரின் மண்ணில் இருந்து வந்திருக்கிறேன். முதன்முதலாக இந்த நாட்டில் வகுப்புவாரி ஒதுக்கீட்டை நீதிக் கட்சியின் ஆட்சியில் கொண்டுவந்தது எங்கள் மண். நாட்டில் முதன்முறையாக 1969ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தவர் எங்கள் தலைவர் கலைஞர். இதன்மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு 25%இல் இருந்து 30% ஆக அதிகரிக்கப்பட்டது.

உங்கள் மதத்தை மாற்றிக் கொள்ளலாம், உங்கள் பொருளாதார நிலையை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், இந்நாட்டில் என்றைக்கும் உங்கள் சாதியை மாற்றிக் கொள்ள முடியாது.

பி.வி.நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு கொண்டுவர முயற்சி செய்யப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில், ‘பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு நிர்ணயிக்க முடியாது’ என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டது. இட ஒதுக்கீட்டுக்குப் பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படைக் காரணியாக கருதவே முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஒன்பது நீதிபதிகளில் எட்டு நீதிபதிகள் ஒத்த கருத்துடன் வழங்கப்பட்ட தீர்ப்பு இது” என்று உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே,

“உங்கள் நேரம் முடிந்துவிட்டது” என்று கனிமொழியை அமரச் சொன்னார் சபாநாயகர். ஆனால் பல எம்.பி.க்கள் கனிமொழியை பேச விடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். அதன்பின் கனிமொழி தொடர்ந்து, “நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு கொண்டுவந்த முதல் அரசியல் சாசன திருத்தத்தில் சமூக, கல்வி ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டுவந்தபோது அதில் பொருளாதார அடிப்படையில் என்ற வார்த்தையை சேர்ப்பதற்கு அவர் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால், இன்று பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு பத்து சதவிகிதம் இட ஒதுக்கீடு என்று இந்த அரசு சொல்கிறது.

நான் கேட்கிறேன்... பத்து சதவிகிதம் என்று எந்த அடிப்படையில் தீர்மானித்தீர்கள்? அரசு ஆய்வு ஏதும் நடத்தியதா? திமுக அரசாங்கம் தமிழகத்தில் சட்டநாதன் ஆணையம், அம்பா சங்கர் ஆணையம் உள்ளிட்ட ஆணையங்களை அமைத்து அறிவியல் ரீதியாக பல கட்ட சமூக ஆய்வுகள் நடத்தப்பட்டு இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. மண்டல் கமிஷன் அமைத்து அதன் அடிப்படையில் மத்தியிலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

ஆனால், இன்று திடீரென பத்து சதவிகிதம் இட ஒதுக்கீடு என்கிறீர்கள். இந்த எண்ணிக்கையை எப்படி நியாயப்படுத்துவீர்கள்? அது தொடர்பாக என்ன மதிப்பீட்டாய்வு செய்தீர்கள்? நீங்கள் சொல்லும் இந்த எண்ணிக்கை நீங்கள் யாருக்காக இதை கொண்டுவருவதாகச் சொல்கிறீர்களோ அவர்களுக்கு உதவக் கூடியதா?

அரசாங்கம் எதுவும் சொல்லவில்லையென்றாலும் எட்டு லட்சம் வருட வருமானம் உள்ளவர்கள், ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் என்று இந்த இட ஒதுக்கீட்டுக்கு சீலிங் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகச் செய்தித் தாள்களில் வருகின்றன. அப்படிப் பார்த்தால் இந்த வரம்புக்குள் நாட்டின் பெரும்பாலான மக்கள் வந்துவிடுகிறார்களே?

முறைப்படுத்தப்படாத ஜிஎஸ்டி, பணமதிப்பழிப்பு போன்றவற்றால் தமிழ்நாட்டின் திருப்பூர் உள்ளிட்ட இந்த நாட்டின் ஒட்டுமொத்த சிறுதொழில் பொருளாதாரத்தையே சிதைத்த நீங்களா பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு பற்றிப் பேசுகிறீர்கள்?

நாடு முழுவதும் விவசாயிகள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். எங்கள் தமிழ்நாட்டு விவசாயிகள் இந்த டெல்லி மண்ணில் மாதக் கணக்கில் தங்கி போராடினார்கள். ஆனால், அவர்களைச் சந்திக்க பிரதமருக்கு நேரம் இல்லை. விவசாயிகளின் பொருளாதாரம் பற்றியெல்லாம் இந்த அரசு கவலைப்படவில்லை. இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இட ஒதுக்கீட்டுக்கு பொருளாதாரத்தை ஓர் அடிப்படைக் காரணியாக எப்படி பொருத்துவீர்கள்?” என்று கேட்ட கனிமொழி தொடர்ந்து பேசுகையில்,

“அசாதாரண நிலை ஏற்பட்டால் ஒழிய இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தவோ, திருத்தவோ கூடாது என்று தீர்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் பொருளாதார இட ஒதுக்கீடு கொண்டுவர இப்போது என்ன அவசரம்? இன்னும் 100 நாட்களில் தேர்தல் வருவதுதான் உங்களுக்கு அசாதாரணமான சூழலாக தெரிகிறதோ என்று கருதுகிறேன்.

நேற்று மாண்புமிகு நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் பேசும்போது, ‘இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பிறகு மாநிலங்களுக்கு அனுப்பப்படாது’ என்று கூறியிருக்கிறார். அவர் நாட்டின் மிகச் சிறந்த சட்ட மூளைக்காரர். அவரது அறிவுக் கூர்மையை நான் வியக்கிறேன். ஆனால், இது எப்படி சாத்தியம்? இந்த மசோதா நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தையும் பாதிக்கும். இந்த மசோதா நாடாளுமன்றத் தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும்” என்றார் கனிமொழி.

இந்த விவாதத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சதீஷ் சந்திர மிஸ்ரா சொன்ன கருத்து முக்கியமானது.

“எங்கள் கட்சித் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்வும் உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சந்தித்துப் பேசிய பிறகுதான் இந்த மசோதா அவசரமாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறது” என்றார்.

உ.பி போன்ற மாநிலங்களில் இருக்கும் உயர் சாதியினரின் வாக்குகளைப் பெறுவதற்காக திடீரென அரசால் கொண்டுவரப்பட்டது இந்த மசோதா என்ற விமர்சனங்களுக்கு இடையில் குடியரசுத் தலைவர் இதை சட்டமாக்குவார். பின் இந்தச் சட்டம் நீதிமன்ற நெருக்கடியில் சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், தேர்தல் பிரச்சாரத்தில், “நாங்கள் போராடிக் கொண்டுவந்து விட்டோம்” என்று உயர் சாதியினர் இடையே பாஜக பிரசாரம் செய்வதற்கு ஏதுவாக இந்தச் சட்டம் அமைந்துள்ளது. இது சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி என்றும் அதிர்வான விவாதங்களுக்குப் பிறகு மாநிலங்களவை இதை நிறைவேற்றியுள்ளது என்றும் பிரதமர் மோடி இந்த வெற்றிக்குப் பிறகு ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon