மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

ரஃபேலிலும் இடைத்தரகர் தலையீடு: காங்கிரஸை தாக்கும் மோடி

ரஃபேலிலும் இடைத்தரகர்  தலையீடு: காங்கிரஸை தாக்கும் மோடி

வெளிநாட்டு இடைத்தரகர் மைக்கேல் மாமா தலையீடு காரணமாக காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதா என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் விவாதம் நடைபெற்று வருகிறது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் அமலாக்கத் துறை பிடியில் உள்ள வெளிநாட்டு இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், காங்கிரஸ் ஆட்சியின் போது போடப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்திலும் தலையிட்டதாக மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இரு தினங்களுக்கு முன்பு குற்றம்சாட்டியிருந்தார்.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் பின்மெக்கானிக்கா என்ற நிறுவனம், யூரோஃபைட்டர் நிறுவனத்தின் பங்குகளைக் கொண்டுள்ளது. ரஃபேல் ஒப்பந்தத்துக்காகக் கடும் போட்டியளித்த யூரோஃபைட்டர், இடைத்தரகர் மூலம் காங்கிரஸ் அரசை அணுகியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதற்கேற்ற வகையில் முன்னதாக, விசாரணையின்போது கிறிஸ்டியன் மைக்கேல், “சோனியா காந்தி”, மற்றும் “இத்தாலி பெண்ணின் மகன்” ஆகிய இரு வார்த்தைகளையும் பயன்படுத்தியதாக அமலாக்கத் துறை பாட்டியாலா நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 9) மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ரஃபேல் விவகாரத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் காங்கிரஸ் தலைவருக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

இடைத்தரகரான கிறிஸ்டியன் மைக்கேலை, மைக்கேல் மாமா என்று குறிப்பிடும் பிரதமர் மோடி, “ஊடகங்களின் தகவலின்படி, கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, மைக்கேல் மாமா விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் மட்டும் தலையிடவில்லை. ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தத்திலும் தலையிட்டார். மைக்கேல் வேறு சில நிறுவனங்களுக்காகவும் செயல்பட்டுள்ளார். ரஃபேல் ஒப்பந்தம் குறித்து கோஷம் எழுப்பும் காங்கிரஸ் தலைவர், இந்த ஒப்பந்தத்தில் மைக்கேல் மாமா தலையீடு குறித்து விளக்கமளிக்க வேண்டும். அவருடைய தலையீட்டால்தான் காங்கிரஸ் ஆட்சியில் 126 ரஃபேல் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தன்னை காவல்காரன் என்று சுட்டிக்காட்டியுள்ள மோடி, “இந்தக் காவல்காரன், ஊழலை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். என் மீது தவறான அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், ஊழலை ஒழிக்கும் பணி தொடரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon