மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

பெருகும் சைபர் குற்றங்கள்!

பெருகும் சைபர் குற்றங்கள்!

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் சைபர் குற்றங்கள் 457 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அசோசேம்-என்.இ.சி. ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பாலிசிங்- ஸ்மார்ட் பாலிசிங் ஃபார் பப்ளிக் சேஃப்டி என்ற தலைப்பில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கமும் (அசோசேம்), என்.இ.சி. நிறுவனமும் இணைந்து சைபர் குற்றங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்த ஆய்வறிக்கையில், ‘2012 முதல் 2017 வரையிலான 5 ஆண்டுகளில் இந்தியாவில் இணையதளப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 44 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதன்மூலம் உலகளவில் இணையதளப் பயன்பாட்டாளர்கள் அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்கா மற்றும் சீனாவையடுத்து இந்தியா 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதே சமயத்தில் இணையதளக் குற்றங்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் பெருகி வந்துள்ளது.

சைபர் குற்றங்களால் உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. 2011 முதல் 2016 வரையிலான 5 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் சைபர் குற்றங்கள் 457 விழுக்காடு உயர்வைக் கண்டுள்ளன.சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த ஒன்றிய அரசின் நிதியும், மாநில அளவில் சைபர் தடுப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கான அமைப்பும், தொழில்நுட்ப மேம்பாடுகளும், கொள்கை முறைகளும் தேவையாக உள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000இன் கீழ் இந்தியாவில் சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. சைபர் குற்றங்களை விசாரிக்கவும், தடுக்கவும் மத்திய சைபர் பிரிவு, மாவட்ட சைபர் பிரிவு மற்றும் காவல் நிலைய சைபர் அணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு, பெரும் தரவு பகுப்பாய்வுகள், முக அடையாளம் காணல், இணையம் சார்ந்த கருவிகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் கண்டறிவதும், சட்ட பாதுகாப்புகளை பலப்படுத்துவதும் அவசியமென்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon