ஆசிஃபா
உரையாடுதல் நல்ல தீர்வு என்று எப்போதும் எண்ணுகிறேன். எவ்வித முன்முடிவுகளும் முன்னேற்பாடுகளும் இல்லாத உரையாடல்கள், நமக்கு ஒரு தெளிவைத் தருகின்றன. குறிப்பாக, நம் வீடுகளில் இப்படிப் பேச வேண்டியது அவசியமாகிறது. நாம் பேசாமல் இருக்க இருக்க, நம் சிறு விரிசல் பெரிய பிளவாகிறது. அதை நாம் உணர்வதற்குள், நாம் தனித்தனித் தீவுகளாக நிற்கிறோம்.
பேசுவது பற்றி இவ்வளவு சொல்லும்போது, ஒரு விஷயத்தைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இதமான தென்றலுடன் ஆரம்பிக்கும் மெல்லிய சாரல், கண்ணிமைப்பதற்குள் பெருமழையாக மாறுவதை உணர்ந்திருக்கிறீர்களா? அதுபோல, வீடுகளில் சாதாரணமாக பேசத் தொடங்கிய ஒன்று பெரும் வாக்குவாதத்தில் சண்டையில் கொண்டு விடுவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன். ஒரு வார்த்தை, ஒரு கேள்வி அல்லது பதில் ஏற்படுத்தும் சிறு சலனம், அனைத்தையும் புரட்டிப் போட்டுவிடும்.
என் வீட்டில் அடிக்கடி இது நிகழும். பெரும்பாலும் எனக்குத்தான் முதலில் கோபம் வரும். ஒன்றுமில்லாத சொல் கட்டுப்படுத்த முடியாத கோபத்தைக் கொண்டுவந்துவிடும். இளங்கலை படிக்கும் போது இதுவே எனக்கு உளவியல் சிக்கலாக இருந்தது. அப்போது, என் நண்பன் ஒருவன் சொன்ன விஷயம் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
“நீ ஒரு விஷயம் பேசறதுக்கு முன்னாடி, உன் மனசுல அத ஒரு முறை சொல்லிப் பாரு. உன் பதில் உன்னை பாதிக்கலனா அத வெளில சொல்லு”.
இன்றுவரை நான் கடைப்பிடித்துவரும் விஷயங்களில் இதுவும் ஒன்று.
நம் சொல் நம்மையே வலிக்கச் செய்கிறது, எரிச்சலூட்டுகிறது என்றால், பிறரையும் பாதிக்கத்தானே செய்யும்? பல நேரங்களில் தேவையில்லாத சண்டைகளை, கோபங்களைத் தவிர்க்க இது ஒன்று உதவுகிறது.
‘கோபம்’, ‘டென்ஷன்’ பற்றிப் பேசிக்கொண்டே போகலாம். நம்மில் பலருக்கு கோபத்தைக் கையாள்வது (anger management) என்பது மிகப் பெரும் சவாலாக இருக்கிறது. கோபம் என்பது ஒரு உணர்ச்சி. இந்தக் கோபத்திற்குப் பின், ஒரு பயம் அல்லது வருத்தம் இருக்கிறது. இதைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று பலரும் கேட்கலாம்.
தெரிந்துகொள்ளுதலே முதல் படி!
இந்த பயம் அல்லது வருத்தம் என்பது கோபமாக மாறுவது நமக்குத் தெரிந்து நிகழ்வதல்ல. காரணம் தெரியாத கோபம் என்று சொல்கிறோம் இல்லையா? அது இப்படித்தான் வருகிறது. அந்தக் காரணத்தைச் சற்று பொறுமையாகத்தான் தேட வேண்டும். அப்படித் தேடும்போது, நம் ஆழ்மனதில் இருக்கும் பயம், வலி, வெறுப்பு ஆகியவற்றை நாமே கண்டறியலாம்.
அதற்கான தீர்வைத் தேட அவசரப்பட வேண்டாம், காரணத்தைத் தெரிந்துகொண்டாலே, பாதி பிரச்சினை தீர்ந்தது போலத்தான்.
கோபத்தில் இன்னொரு முக்கியமான விஷயம், மனநிலை மாற்றங்கள் (mood swings). எதற்கென்றே தெரியாமல் கோபம், அழுகை, சந்தோஷம் என்று மாறிக்கொண்டே இருக்கும். உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்கள், குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் mood swings ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்கள். இது தவிர உளவியல் பிரச்சினைகள், போதைப் பொருட்களின் பயன்பாடு ஆகியவையும் mood swingsஐ உருவாக்கும்.
இது நம் வாழ்க்கையில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தெரிந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவதே நல்லது.
கோபம், சந்தோஷம், வருத்தம், வெறுப்பு, பதற்றம் என எல்லா உணர்ச்சிகளும் சேர்ந்துதான் நம்மை உருவாக்குகின்றன. அந்த உணர்ச்சிகள் நம் கட்டுப்பாட்டில் இருப்பதுவரை எந்த பிரச்சினையும் இல்லை, மாறாக உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டில் நாம் இயங்கக் கூடாது.
பேசுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். கோபம் வருகிறதா? என் அம்மா எனக்குச் சொன்ன வழி இதுதான்:
“வாயில் தண்ணீரை வைத்துக்கொண்டு இரண்டு நொடி இரு, தன்னால் கோபம் குறையும்.”
எளிமையான வழிதான், ஆனால், வாயில் தண்ணீர் பத்திரம்!
முந்தைய பகுதி : இளைஞர்களின் உறவுகளில் ஏன் இந்தச் சிக்கல்?