உலகின் பணக்காரத் தம்பதிகளில் ஒருவராகக் கருதப்பட்ட ஜேஃப் பெசோஸ் – மெக்கன்ஸி தம்பதி 25 ஆண்டுகளுக்குப் பின்னர் விவாகரத்து செய்துள்ளனர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார் அமேசான் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப்.
“நீண்டகால அன்புத் தேடல் மற்றும் பிரிவுச் சோதனைக்குப் பிறகு, நாங்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளோம். ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்களாகத் தொடர்வோம்” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறோம் என்றும், இத்தனை ஆண்டுகாலமும் திருமண வாழ்வில் இணைந்திருந்ததற்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். பெற்றோராக, நண்பர்களாக, பங்குதாரர்களாக எங்களது செயல்திட்டங்கள், முதலீடுகளில் ஒருங்கிணைப்பு தொடரும் என்று இருவரும் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.
ஜெஃப் பெசோஸ் வயது 54. மெக்கன்ஸியின் வயது 48. ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி பெசோஸின் சொத்து மதிப்பு 137 பில்லியன் டாலர்கள் ஆகும். இதனால், இவர்களது விவாகரத்து இந்த மதிப்பில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.