மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

வெளியேறிய நீதிபதி: அயோத்தி வழக்கு ஒத்திவைப்பு!

வெளியேறிய நீதிபதி: அயோத்தி வழக்கு ஒத்திவைப்பு!

நீதிமன்ற அமர்விலிருந்து நீதிபதி ஒருவர் வெளியேறியதால் அயோத்தி வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் - ராம ஜன்மபூமி வழக்கு விசாரணை இன்று (ஜனவரி 10) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா, யு.யு.லலித், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. விசாரணை தொடங்கியவுடன், நீதிபதி லலித் வழக்கறிஞராக இருந்தபோது 1994ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வரான கல்யாண் சிங்கிற்காக ஆஜரானதாக முஸ்லிம் அமைப்புகள் தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் தவான் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் தெரிவித்தார். வழக்கு விசாரணையிலிருந்து லலித் வெளியேற வேண்டும் என ராஜீவ் தவான் கோரிக்கை விடுக்காதபோதிலும், லலித் தானாகவே முன்வந்து நீதிமன்ற அமர்விலிருந்து வெளியேறுவதாகக் கூறினார்.

லலித் வெளியேறுவதாகத் தெரிவித்ததனால் வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்படுவதாக ரஞ்சன் கோகாய் தெரிவித்தார். “விசாரணையில் நீதிபதி லலித் பங்கேற்க விரும்பாததால், அவருக்குப் பதிலாக மற்றொரு உச்ச நீதிமன்ற நீதிபதி நியமிக்கப்பட்ட பிறகு ஜனவரி 29ஆம் தேதியன்று வழக்கு விசாரிக்கப்படும்” என்று ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வை தலைமை நிதிபதி அமைத்தார். அயோத்தி வழக்கில் 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக 14 மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon