மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

ஏர்டெலைப் பின்னுக்குத் தள்ளும் ஜியோ!

ஏர்டெலைப் பின்னுக்குத் தள்ளும் ஜியோ!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் காலாண்டு வருவாய் முதன்முறையாக ஏர்டெலை விஞ்சும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நுழைந்ததிலிருந்தே பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்து அதிக வாடிக்கையாளர்களைத் தனது சேவைக்குள் இணைத்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் ஏர்டெல் உள்ளிட்ட இதர நெட்வொர்க் நிறுவனங்களைக் காட்டிலும் அதிக வாடிக்கையாளர்களை இணைத்து சாதனை படைத்திருந்தது. அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக்கான நெட்வொர்க் நிறுவனங்களின் வருவாய் விவரங்கள் வெளியாகவுள்ள நிலையில், முதன்முறையாக ஏர்டெலை விஞ்சி கூடுதலான வருவாயை ரிலையன்ஸ் ஜியோ ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோவின் கடுமையான போட்டியால் சமீபத்தில் இணைந்து சேவை வழங்கி வரும் வோடஃபோன் - ஐடியா நெட்வொர்க் நிறுவனம் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் ரூ.4,001.7 கோடி இழப்பைச் சந்திக்கும் என்று ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் தனது ஆய்வில் மதிப்பிட்டுள்ளது. இந்நிறுவனம் இதற்கு முந்தைய ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ரூ.4,974 கோடி இழப்பைச் சந்தித்திருந்தது. வோடஃபோன் - ஐடியா இணைவுக்கு முன்புவரை இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க் நிறுவனமாக இருந்துவந்த ஏர்டெல் நிறுவனம் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் ரூ.649 கோடி முதல் ரூ.1,141 கோடி வரையில் வருவாய் இழப்பைச் சந்திக்கும் என்று கிரெடிட் சூயிஸ் மற்றும் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகின்றன.

கடந்த 16 ஆண்டுகளில் முதன்முறையாக ஏர்டெல் நிறுவனம் இவ்வளவு பெரிய வருவாய் இழப்பைச் சந்திக்கவுள்ளது. அதேநேரம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.751 கோடி லாபம் ஈட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக ஜியோவின் லாபம் வளர்ச்சியடைந்துள்ளது. ஜியோவின் மொத்த வருவாய் ரூ.10,327 கோடியாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon