மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

தேவையில்லாமல் வணிகர்களை துன்புறுத்தக் கூடாது!

தேவையில்லாமல் வணிகர்களை துன்புறுத்தக் கூடாது!

தடை செய்யப்பட்ட 14 பிளாஸ்டிக் பொருட்களை தவிர மற்ற பொருட்களை பறிமுதல் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறுசுழற்சி செய்ய முடியாத, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு கடந்தாண்டு ஜூன் 25ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து ஏற்கனவே பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில், சென்னையைச் சேர்ந்த பிளாஸ்டிக் வியாபாரிகள் 50 பேர் பிளாஸ்டிக் தடையை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், தமிழக அரசின் அரசாணையை சுட்டிக்காட்டி தங்கள் கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி, அரசாணையில் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருவதாக குற்றம் சாட்டினர்.

இந்த வழக்கு இன்று(ஜனவரி 10) நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசாணை பற்றி தெளிவான புரிதல் இல்லாமல் அதிகாரிகள் தவறாக நடவடிக்கை எடுத்து தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வதாக மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, தடை செய்யப்பட்ட 14 பிளாஸ்டிக் பொருட்களை தவிர மற்ற பொருட்களை பறிமுதல் செய்யக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், அரசாணையை முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும், வியாபாரிகளை அவசியம் இல்லாமல் துன்புறுத்தக் கூடாது எனவும் தெளிவுபடுத்தினர். பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை நீக்க முடியாது என மறுப்பு தெரிவித்தனர்.

பின்னர் இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon