மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

ராகுலுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

ராகுலுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். சிபிஐ விசாரணை மற்றும் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது. அப்போது நடைபெற்ற விவாதத்தின் போது, ராகுல், 56 இன்ச் மார்பு கொண்ட பிரதமர் மோடி மக்கள் நீதிமன்றத்துக்கு வராமல் தப்பி ஓடிவிட்டார். மோடியை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாதுகாப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அதுபோன்று, நேற்று ஜெய்ப்பூரில் பொது கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, ரஃபேல் விவகாரத்தில் இருந்து தப்பிக்க பிரதமர் மோடி ஒரு பெண்ணின் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறார் என்று நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

இந்நிலையில் ஆக்ராவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் ரஃபேல் விவாதத்தின் போது நிர்மலா சீதாராமன் முறையான பதில் அளித்துள்ளார். நாட்டில் முதன் முறையாக ஒரு பெண் எனது அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் காந்தி என்று பெயரை குறிப்பிடாமல், அவர்கள் ஒரு பெண் அமைச்சரை மட்டும் விமர்சிக்கவில்லை. நாட்டில் உள்ள ஒட்டு மொத்த பெண் சக்தியையும் தரம் தாழ்த்திப் பேசிவிட்டனர்” என்று கூறியிருந்தார்.

இதற்கு ட்விட்டரில் பதில் அளித்த ராகுல், ”மதிப்புக்குரிய மோடிஜி. நம்முடைய கலாச்சாரம் என்பது பெண்களை வீட்டில் இருந்தே மதிக்கத் தொடங்குவதில்தான் ஆரம்பிக்கிறது என்று குறிப்பிட்டு முதலில் நடுங்குவதை நிறுத்திவிட்டு எனது கேள்விக்கு பதில் அளியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், பாலின பாகுபாடாக நிர்மலா சீதாராமனை 'பெண்' என்று பிரித்துப் பேசியதாகக் கூறி தேசிய மகளிர் ஆணையம் இன்று (ஜனவரி 10) ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா, ஒரு அரசியல்வாதியாக இருக்கும் ராகுல் காந்தி பெண்களுக்கு எதிரான இப்படி ஒரு கருத்தினை வைப்பது அவருடைய இயல்பினை காட்டுகிறது. அவ்வாறு பேசியதன் மூலம் ராகுல் என்ன சொல்ல வருகிறார்? இதுகுறித்து அவர் விளக்கமளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon