மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகளுக்கு இடமில்லை: தம்பிதுரை

தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகளுக்கு இடமில்லை: தம்பிதுரை

தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டில் ஒரு இடத்தைக் கூட வெல்லாது என்று மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

முன்னேறிய சமூகத்தினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு ஜனவரி 8ஆம் தேதி மக்களவையிலும், 9ஆம் தேதி மாநிலங்களவையிலும் தாக்கல் செய்தது. மக்களவையில் நடந்த இதன்மீதான விவாதத்தில் தம்பிதுரையின் உரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கல்வி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்பதே அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துவது. பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்குவது அதற்கு எதிரானது என்று மிகக் கடுமையாக தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்.

அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் உள்ள நட்புறவைக் காரணம்காட்டி நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி வைத்து போட்டியிடும் என்று பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில் தம்பிதுரையின் பேச்சு அதற்கு எதிர்மாறாக அமைந்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகளால் ஒரு இடத்தை கூட வெல்ல இயலாது என்று தம்பிதுரை டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

திடீரென மோடி அரசுக்கு எதிரான தீவிரமான தாக்குதலை அதிமுக தொடுத்திருக்கிறது. ஏன் அப்படி? என்ற கேள்விக்கு தம்பிதுரை பதிலளிக்கையில், “இது திடீரென நடந்ததல்ல. ஜெயலலிதா இருந்தபோதும் இப்படித்தான் இருந்தது. பாஜகவுடன் சேர்ந்துபோகாத கொள்கைகளையும், தத்துவங்களையும் நாங்கள் பின்பற்றுகிறோம். அரசாங்கத்தை ஆதரிப்பதற்கும், பாஜகவின் கொள்கைகளை ஆதரிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. ஜிஎஸ்டியை எடுத்துக்கொள்ளுங்கள். தமிழ்நாடு மட்டும்தான் எதிர்த்தது. அப்படி மாறுபட்ட நிலையை எடுத்தவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டின் நலனில் அக்கறை காட்டும்விதமாக பல மசோதாக்களை எதிர்த்திருக்கிறோம்” என்றார்.

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை எதிர்த்து ஏன் வெளிநடப்பு செய்தீர்கள்? என்ற கேள்விக்கு, “சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதில் தமிழ்நாட்டுக்கு மிக நீண்ட வரலாறு இருக்கிறது. அதனால் அதிமுக இதற்கு ஆதரவாக நிற்கும். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது நியாயமற்றது மற்றும் பொருத்தமற்றது.

பாஜக முன்னேறிய சமூகத்தினரை ஆதரிக்க விரும்புகிறது. இந்த முயற்சியால் ஊழல் பெருகும். கருப்புப் பணத்தை மீட்டு எல்லோருடைய வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக மோடி தெரிவித்தார். அதைச் செய்திருந்தாலே பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் இருந்திருக்க மாட்டார்களே. இந்த மசோதா கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. அதனால்தான் வெளிநடப்பு செய்தோம்” என்றார். மேலும், ”மேகதாது பிரச்சினையில் திட்டம் தயாரிக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு எவ்வாறு ஒப்புதல் அளித்தது? காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு கட்சிகளுமே கர்நாடக அரசியல் நலனை மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளன. 2 தேசியக் கட்சிகளும் தமிழகத்தில் ஒரு இடத்தைக் கூட வெல்லாது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்த விவாதங்களில் இரண்டு கட்சிகளுமே எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை” என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon