மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

ஜல்லிக்கட்டுக்குத் தடை: நீதிமன்றம் எச்சரிக்கை!

ஜல்லிக்கட்டுக்குத் தடை: நீதிமன்றம் எச்சரிக்கை!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவின் தலைவர் தன்னிச்சையாகச் செயல்படுவதாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. “அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவின் தலைவர் கண்ணன் கணக்கு வழக்குகளை முறையாகச் சமர்ப்பிப்பதில்லை, யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறார். அனைத்து சமூகப் பிரதிநிதிகள் பங்களிப்புடன் கூடிய விழாக் குழுவை அமைத்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு விழாக் குழுவில் அனைத்து சமூகத்தினரும் இடம்பெற வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே ஜல்லிக்கட்டு தொடர்பாக முடிவெடுத்து வருவதாகவும் அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (ஜனவரி 10) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை எனில் தடை விதிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தது உயர் நீதிமன்றம். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக் குழுவை நீதிமன்றமே அமைக்கும் என்றும் தெரிவித்தது.

இந்த வழக்கில் உடனடியாக மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று மதியம் மீண்டும் நடைபெறும் என்று கூறி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon