மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

ரூ.1,000 வழங்கத் தடை: அதிமுக மேல்முறையீட்டு மனு மறுப்பு!

ரூ.1,000 வழங்கத் தடை: அதிமுக மேல்முறையீட்டு மனு மறுப்பு!

அனைத்துத் தரப்பினருக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1,000 வழங்கத் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஜனவரி 7 முதல் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அனைத்துத் தரப்பினருக்கும் ரூ.1,000 வழங்கினால் தமிழக அரசுக்குக் கூடுதல் நெருக்கடி ஏற்படும் என்று கோவையைச் சேர்ந்த டேனியல் ஜேசுதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நேற்று (ஜனவரி 9) விசாரித்த நீதிமன்றம், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து ஒரு சில ரேஷன் கடைகளில் ரூ.1,000 வழங்குவது நிறுத்தப்பட்டது. எனினும் சிறிது நேரத்தில் தொடர்ந்து அனைத்து கார்டுகளுக்கு ரூ.1,000 பணம் வழங்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களிலும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களுக்கு நேரில் வழங்கினார்.

நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில், அனைவருக்கும் ரூ.1,000 வழங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அதிமுக வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் முறையீடு செய்தார் .

பல பேர் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வாங்கி விட்டார்கள் என்றும், நேற்று பிறப்பித்த உத்தரவால் இன்னும் பல பேர் வாங்க முடியாத சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு ஏற்க மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும், ”வழக்கு தொடர உங்களுக்கு என்ன தகுதி உள்ளது? எங்கள் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யுங்கள்” என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon