மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 12 டிச 2019

பணப்பட்டுவாடா வழக்கு: வருமான வரித்துறை பதில்மனு!

பணப்பட்டுவாடா வழக்கு: வருமான வரித்துறை பதில்மனு!

89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா தொடர்பாக எந்த ஆவணத்தையும் நாங்கள் வெளியிடவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக திமுக வேட்பாளர் மருது கணேஷ் மற்றும் வழக்கறிஞர் வைரக்கண்ணன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது.

கடந்த டிசம்பர் 17ஆம் தேதி நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது திமுக வேட்பாளர் மருது கணேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ உண்மை வெளிச்சத்துக்கு வர இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக குற்றவாளிகள் மீது வழக்குப் பதியாதது ஏன் என்பது உள்பட காவல் துறைக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், சிபிஐக்கு மாற்ற வேண்டும் என திமுக வேட்பாளர் மருது கணேஷ் தாக்கல் செய்த கூடுதல் மனுவுக்கு ஜனவரி 10ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, வருமான வரித்துறை, டிஜிபி மற்றும் சிபிஐக்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை அன்றைய தினத்துக்கே தள்ளிவைத்தனர்.

இதுதொடர்பாக வருமான வரித் துறை தரப்பில் இன்று (ஜனவரி 10) தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், “இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா, தந்தை சின்னத்தம்பி ஆகியோரை விசாரிக்க கால அவகாசம் இருக்கிறது. அதுவரை விசாரிப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “வருமான வரித் துறை தகவல்கள் வெளிப்படையாகத் தெரிந்துள்ளது என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால் ஸ்டாலின் சொன்னதுபோல எதுவும் நடக்கவில்லை. பணப்பட்டுவாடா விசாரணை விவரங்களை நாங்கள் வெளியிடவில்லை. விசாரணை விவரங்கள் யாருக்கும் தெரியாது” என்றும் அதில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon