மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

ராணுவத்தில் ஓரினச்சேர்க்கையை அனுமதிக்க முடியாது!

ராணுவத்தில் ஓரினச்சேர்க்கையை அனுமதிக்க முடியாது!

இயற்கைக்கு மாறான, ஓரினச் சேர்க்கை நடவடிக்கைகள் இந்திய ராணுவத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார் ராணுவப் படை தளபதி பிபின் ராவத்.

இன்று (ஜனவரி 10) டெல்லியில் நடைபெற்ற வருடாந்திரச் சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசினார் ராணுவ தளபதி பிபின் ராவத். அப்போது, ஓரினச் சேர்க்கை குறித்த தனது கருத்தை வெளியிட்டார். “ராணுவத்தில் இயற்கைக்கு மாறான உறவு, ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி இல்லை. வெவ்வேறு ராணுவச் சட்டப் பிரிவுகளின் துணையோடு, அதனை நாங்கள் எதிர்கொள்வோம். நாட்டின் சட்டங்களைவிட ராணுவம் உயர்ந்தது கிடையாது. ஆனால், சாதாரண மக்களுக்கு இருக்கும் சலுகைகளும் உரிமைகளும் ராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்கு இல்லை. சில விஷயங்களில் நாங்கள் வித்தியாசமானவர்கள் தான். ஆனால், உச்ச நீதிமன்றத்தை விடக் கண்டிப்பாக நாங்கள் உயர்ந்தவர்கள் கிடையாது” என்று அவர் தெரிவித்தார்.

வேறொருவர் மனைவியுடன் உறவு கொள்வது குற்றமாகாது, ஓரினச்சேர்க்கைக்கு சட்டப்பூர்வமான அனுமதி என்பது உள்ளிட்ட உச்ச நீதிமன்றத்தின் சமீபகாலத் தீர்ப்புகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, பிபின் ராவத் மேற்கண்டவாறு கூறினார். அதோடு, நமது கலாசாரத்தை மீறுவது முறையாகாது என்றும் தெரிவித்தார். நாங்கள் நவீனமானவர்களோ, மேற்கத்திய தாக்கம் உள்ளவர்களோ அல்லர் என்றும் அவர் தன் பேச்சில் குறிப்பிட்டார். “இதனை எவ்வாறு இந்த சமுதாயம் எதிர்கொள்ளப் போகிறது? இன்னும் 20 ஆண்டுகள் கழித்து என்ன நடக்கும் என்று என்னால் சொல்ல முடியாது” என்றார்.

சமூக வலைதளங்களை ராணுவத்தினர் பயன்படுத்துவதில் தடை ஏதும் இல்லை என்று கூறிய பிபின், அதில் சில கட்டுப்பாடுகள் மட்டும் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிவித்தார். “சமூக ஊடகங்களை வைத்து நம்மை வலைக்குள் சிக்க வைக்க முடியும் என்பதை ராணுவ வீரர்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளோம். அதனால், அவர்கள் குறிப்பிட்ட நோக்கங்களுக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்துவர். அதனால் சமூக வலைதளங்களின் கண்ணியில் சிக்காதீர்கள்” என்று அவர் கூறினார்.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon