மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

அமைச்சர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள்: நீதிமன்றத்தில் தாக்கல்!

அமைச்சர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள்: நீதிமன்றத்தில் தாக்கல்!

ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா தொடர்பான சோதனையின்போது விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை இன்று தாக்கல் செய்தது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது. அப்போது 87 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா தொடர்பான ஆவணங்களை வருமான வரித் துறை கைப்பற்றியது. அந்த ஆவணத்தில் முதலமைச்சர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் பெயரும் இடம் பெற்றிருந்தது.

இதுதொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தரப்பிலிருந்தும், வழக்கறிஞர் வைரக்கண்ணன் தரப்பிலிருந்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு வருமான வரித் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வருமான வரித் துறை சார்பில் இன்று (ஜனவரி 10) பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு இன்று பிற்பகல் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித் துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சீலிட்ட உரையில் வருமான வரித் துறையினர் தாக்கல் செய்தனர்.

இந்த ஆவணங்களை தங்கள் தரப்புக்கு வழங்க வேண்டுமென மருது கணேஷ் தரப்பு வழக்கறிஞர் பி.வில்சன் கோரிக்கை விடுத்தார். வழக்கின் விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டபிறகு ஆவணங்களை திமுக தரப்புக்கு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டனர்.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon