மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்குத் தடை!

செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்குத் தடை!

நாளை நடைபெறவிருந்த அரசு செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத் துறை ஊழியர்கள் நலச் சங்கச் செயலர் கார்த்திக் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்தார். “சென்னையில் ஜனவரி 11ஆம் தேதியன்று செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வு நடப்பதாக, கடந்த ஜனவரி 7ஆம் தேதி ஊரக நலப்பணிகள் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க, இப்போது பணிபுரியும் இடத்தில் ஓராண்டாகப் பணியாற்றி வருவதற்கான சான்றிதழை அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அறிவிப்பு மூன்று நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டதால், பணி சான்றிதழ் பெற முடியாமல் உள்ளது. இதனால் கலந்தாய்விலும் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில் இடமாறுதல் கலந்தாய்வு நடக்கவிருப்பதாகப் பல செவிலியர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவர்கள் பணம் கொடுத்து இடமாறுதல் பெற வாய்ப்புள்ளது. அதனால், ஊரக நலப்பணிகள் இயக்குநரின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்” என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இன்று (ஜனவரி 10) இந்த மனு நீதிபதி சுப்பிரமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாளை நடைபெறுவதாக இருந்த செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon