மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

ஸ்டாலினை விசாரணைக்கு அழைக்க வேண்டும்: தினகரன்

ஸ்டாலினை விசாரணைக்கு அழைக்க  வேண்டும்: தினகரன்

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாகக் கூறும் ஸ்டாலினை, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மாதக்கோட்டையில் நேற்று நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது உடல்நிலை குறித்து தெளிவான அறிக்கைகள் வழங்கப்படவில்லை என்றும், ஜெயலலிதா மறைவில் மர்மம் உள்ளது, அதற்கு யார் காரணம் என்றாலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களைச் சிறையில் அடைப்போம் என்றும் தெரிவித்திருந்தார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இன்று (ஜனவரி 10) செய்தியாளர்களிடம் பேசியபோது இதற்கு பதிலளித்த தினகரன், “தேர்தலை கண்டு பயந்து ஒதுங்கும் கட்சி திமுக. தனது தந்தை தொகுதியிலேயே ஓடிஒளியும் ஸ்டாலின், ஜெயலலிதா மரண மர்மத்திற்கு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது. மர்மம் உள்ளதாகக் கூறும் ஸ்டாலினுக்கு சம்மன் அளித்து, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு அழைக்க வேண்டும். தேர்தலுக்கு தேர்தல் ஸ்டாலின் இவ்வாறு கூறுகிறார். ஜெயலலிதா மீது வழக்கு தொடுத்து, இறந்தபிறகும் அவருக்கு களங்கத்தை ஏற்படுத்தியது திமுகதான். ஜெயலலிதா உடலை எடுத்து சோதனை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு கூறுகிறார்” என்று விமர்சித்தார்.

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் உபரி நீர் செல்லும் வாய்க்கால்களை நீட்டிப்பு செய்ய ஜெயலலிதா ஆட்சியின்போது, 377 கோடி ரூபாயில் தீட்டப்பட்ட திட்டத்தை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம் சாட்டி, அமமுக சார்பில் இன்று தருமபுரி அருகே பாலக்கோடு பேருந்து நிலைய பகுதியில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தினகரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon