மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

10% இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு: வழக்கு!

10% இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு: வழக்கு!

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இதுதொடர்பான மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேறியது. தொடர்ந்து மாநிலங்களவையில் இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவின் மீது நேற்று நடந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தேர்தலுக்காகவே இதனை பாஜக கொண்டுவருவதாக குற்றம் சாட்டினர். திமுக சார்பில் பேசிய கனிமொழி, சாதி அடிப்படையில்தான் இடஒதுக்கீடு வேண்டுமென வலியுறுத்தினார். ஆனால் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 10) மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமத்துவத்துக்கான இளைஞர் அமைப்பும், கவுஷல் காந்த் மிஸ்ரா என்பவரும் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “பொருளாதாரம் என்ற ஒற்றை அளவுகோல் மட்டுமே இடஒதுக்கீட்டின் அடிப்படையாக இருக்க முடியாது, எனவே இந்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், “இந்த மசோதா என்பது இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினையும் மீறும் வகையில் உள்ளது. பொருளாதார அடிப்படைகள் பொதுப் பிரிவினருக்கு மட்டுமானதாக இருக்க முடியாது. இடஒதுக்கீடு என்பது 50 சதவிகிதத்துக்கு மேல் இருக்கக் கூடாது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

10 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குகள் தொடரப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் வழக்கு இன்று தொடரப்பட்டுள்ளது. மேலும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இடஒதுக்கீட்டை எதிர்த்து நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon