மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

மகளிர் விடுதிகள் அமைக்கக் கோரி வழக்கு!

மகளிர் விடுதிகள் அமைக்கக் கோரி வழக்கு!

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மகளிர் விடுதிகள் அமைக்கக் கோரிய மனுவுக்கு ஜனவரி 28ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருவதாகக் கூறி, அனைத்து ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பெண்கள் பாதுகாப்பு மண்டலங்கள் அமைக்க வேண்டும் என வழக்கறிஞர் கனிமொழி, மதி உள்ளிட்ட எட்டு பெண் வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தஹில் ரமானி மற்றும் நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜனவரி 10) விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'பெண்கள் பாதுகாப்புக்கு பல சட்டங்கள் இருந்தும் அவை முறையாக அமல்படுத்தப்படுவதில்லை. பாலியல் தொல்லைகள் குறித்து பெண்கள் புகார் அளித்தால் அவற்றின் மீது காவல் துறையினர் முறையான விசாரணை நடத்துவது இல்லை' என மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

மேலும், தமிழகத்தில் அனைத்து முக்கிய நகரங்களில் கல்வி மற்றும் பணிக்காக வரும் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்கள் தங்குவதற்கு மகளிர் விடுதிகளை அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது

இந்த, மனுவுக்கு ஜனவரி 28ஆம் தேதிக்குள் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon