மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

பள்ளி வளாகத்தில் நிறுவனங்கள்: மாணவர்கள் அவதி!

பள்ளி வளாகத்தில் நிறுவனங்கள்: மாணவர்கள் அவதி!

சென்னை கொருக்குப்பேட்டையில் அரசு உதவி பெறும் ஆர்ஜெஆர் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியின் நிலையும், இங்கு பயிலும் மாணவர்களின் நிலையும் மிக மோசமாக உள்ளதாகப் புகார் வெளியாகியுள்ளது.

இந்த பள்ளியில் நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்துப் பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். “பள்ளியின் தரைதளத்தில் காகித குடோனும், முதள் தளத்தில் இரண்டு ஏற்றுமதி ஆடை நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இங்கு 50க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த கட்டடங்கள் எந்த அனுமதியின்றியும், தீத்தடுப்பு சாதனங்கள் மற்றும் அவசர வழியுமின்றி உள்ளது. பள்ளியின் முதல் தளத்திலிருந்து இரண்டாவது தளத்திற்கு செல்லும் இரண்டு பக்க படிக்கட்டில் இரும்பு கதவு வைத்து பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளது. இதனால், அவசர காலங்களில் குழந்தைகள் வெளியேற முடியாத சூழல் ஏற்படும்.30 அடியாக இருந்த பள்ளியின் நுழைவுவாயிலை 4 அடியாகக் குறைத்து, அங்கு கடைகளை வாடகைக்கு விட்டுள்ளனர். பள்ளியின் முதல் தளத்திலுள்ள கழிவறைகளும் ஏற்றுமதி நிறுவனத்துக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மாணவர்கள் தரை தளத்திலுள்ள கழிவறையைப் பயன்படுத்த வேண்டும். அந்த கழிப்பறையைப் பார்த்தால் சிறை வாழ்க்கை சிறந்தது என்ற எண்ணம் தோன்றும். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த நிலையே தொடர்ந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

இது குறித்து அப்பகுதியிலுள்ள மக்கள் புகார் அளித்ததைத் அடுத்து, 2015ஆம் ஆண்டில் இந்த பள்ளி மீது தமிழகப் பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்தது. இருப்பினும், நிலைமையில் மாற்றம் இதுவரை ஏற்படவில்லை. “கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதியன்று பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பேப்பர் குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் பள்ளிக்குத் தீயணைப்புத் துறை வழங்கிய சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. ஆனால், இரண்டு நாட்களிலேயே அந்த நிறுவனம் திறக்கப்பட்டது. இதற்கு மாவட்ட அதிகாரிகள் துணை இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்கிறார்களே தவிர, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஏற்றுமதி நிறுவனத்தில் எப்போதும் சினிமா பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். இது மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல், ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருக்கும்போது, பள்ளியின் தாளாளர் வகுப்பறையில் நாயுடன் வந்து உட்கார்ந்துகொள்வார். செல்போன் பயன்படுத்துவார். இது போன்ற செயல்களினால் மாணவர்களுக்கான கற்பித்தல் பாதிக்கப்படுகிறது. இது குறித்து பெற்றோர்களும் மனித உரிமை ஆணையம் வரை புகார் அளித்துள்ளனர்.

பள்ளிக் கட்டடத்தில் தான் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்றாலும், அதனைப் பக்கத்து கட்டடம், இணை கட்டடம் என்றே சொல்கிறார்கள். ஆனால், கதவு எண் அனைத்துமே ஒன்றுதான்” என்று தெரிவித்தார்.

பள்ளிக்கு மானியம் வழங்குமாறு, உதவி தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்குக் கடிதம் எழுதியுள்ளார். பள்ளிக்கு முன்னால் கடைகளும், பின்னால் இருந்த கழிவறைகளும் வேறு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுவதாக அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். “இந்த பள்ளியின் கட்டட உரிமச் சான்று, உறுதிச் சான்று, சுகாதாரச் சான்று, தீத்தடையின்மை சான்று புதுப்பிக்கப்படவில்லை. தொடர் அங்கீகாரம் 7, 8ஆம் வகுப்புகளுக்குப் பெறப்படவில்லை. எனவே, பள்ளிக்கு மானியம் வழங்குவது சார்ந்து தங்களின் மேலான அறிவுரையையும், பரிசீலனையையும் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதனைக் குறிப்பிட்ட அந்த நபர், இந்த பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு அரசு தக்க நடவடிக்கை எடுக்குமா என்று நம்மிடம் கேள்வி எழுப்பினார்.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon