மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

இரண்டாம் இடத்துக்கு மோதும் ரஜினி, அஜித்

இரண்டாம் இடத்துக்கு மோதும் ரஜினி, அஜித்

தமிழ் சினிமா 365: பகுதி - 10

இராமானுஜம்

தமிழ் சினிமாவில் எப்போதும் இல்லாத வகையில் பொங்கல் வெளியீட்டில் முன்னணி நாயகர்களான ரஜினி, அஜித் நடித்துள்ள பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.

சுமார் 250 கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இரு படமும் ரிலீஸுக்கு முன்னதாகவே லாபகரமாக வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு படத்திற்கான முன்பதிவில் சென்னை நகர் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மால் தியேட்டர்களிலும் முதல் மூன்று நாட்கள் டிக்கெட் விற்பனையாகி சாதனை நிகழ்த்தியுள்ளது.

பிற திரையரங்குகளில் 60% முதல் 80% டிக்கெட் தொடக்க காட்சி, பகல் காட்சிகளுக்கு விற்பனை ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, விஜய் சேதுபதி, சசிகுமார், திரிஷா, சிம்ரன், அஜித், நயன்தாரா, என முக்கியமான தமிழ் நட்சத்திரங்கள் இரு படங்களிலும் நடித்திருப்பதால் பெரிய அளவில் ஒப்பனிங் இன்று காலை தியேட்டர்களில் இருந்துள்ளது.

சிறப்புக் காட்சிக்கான அனுமதி அரசு வழங்கவில்லை என ஊடகங்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்றைய தினம் கூறினார்.

ஆனால் சென்னையில் அதிகாலையும் பிற இடங்களில் காலை 4 மணிக்கும் இரு படங்களும் சிறப்புக் காட்சிகளாக திரையிடப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் விஸ்வாசம் படம் வசூலில் முதல் இடத்திலும் இரண்டாம் இடத்தில் பேட்ட படமும் இருப்பதாக தியேட்டர் வட்டாரத் தகவல். இந்த நிலை அடுத்து வரும் நாட்களில் மாறக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவே விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் நடிகர் விஜய் நடித்த படங்களின் வசூல் முதல் இடத்திலும், சாதனை நிகழ்வாகவும் இருந்து வருகிறது, இந்த நிலையில் இரு படங்களின் வசூல் இரண்டாம் இடம் யாருக்கு என்பதை தீர்மானிப்பதாகவே இருக்கும் என்கிறது திரையுலக வட்டாரம்.

முதல் நாள் மொத்த வசூல் எவ்வளவு என்கிற தகவலுடன் நாளை பகல் 1 மணி பதிப்பில் சந்திக்கலாம்.

முந்தைய பகுதி : பேட்ட - விஸ்வாசம்: ரிலீஸுக்கு முந்தைய நிலவரம்!

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon