மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி - தினகரனை இணைக்க மோடி மீண்டும் முயற்சி!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி - தினகரனை இணைக்க மோடி மீண்டும் முயற்சி!

மொபைலில் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “நேற்றைய டிஜிட்டல் திண்ணையில், ஊராட்சி சபை என்ற பெயரில் தமிழகம் முழுக்க திமுக நடத்திய கூட்டம் கட்சி கூட்டம் போல இருந்தது என குறிப்பிட்டு இருந்தோம். நேற்று மதியமே தமிழகம் முழுவதும் நடந்த கூட்டங்களின் போட்டோவை பார்த்து டென்ஷன் ஆன ஸ்டாலின், நிர்வாகிகள் சிலரை அழைத்து கடுமையாக பேசியதையும் சொல்லியிருந்தோம். அதன் பிறகு நேற்று மாலையில் இருந்தே, திமுகவின் ஊராட்சி சபை கூட்டத்தில் அதிரடி மாற்றங்களைப் பார்க்க முடிந்தது.

எந்த ஊரிலும் திமுக கொடியோ, தட்டி பேனர்களோ ஊராட்சி சபை கூட்டம் நடக்கும் இடத்தில் பார்க்கவே முடியவில்லை. அதேபோல கட்சி நிர்வாகிகளையும் அழைத்து வந்து முன்வரிசையில் உட்கார வைக்கவே இல்லை. சில மணி நேரங்களில் அதிரடியாக அத்தனையும் மாற்றிவிட்டார் ஸ்டாலின். “ என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப். தொடர்ந்து ஃபேஸ்புக் ஸ்டேட்டஸும் அப்டேட் செய்தது. ”தமிழகத்தில் உள்ள பிஜேபி நிர்வாகிகளுடன் தொடர்ந்து வீடியோ கான்ஃப்ரன்ஸிங்கில் பேசி வருகிறார் பிரதமர் மோடி. அந்த வரிசையில் இன்று ஜனவரி 10 ஆம் தேதி அரக்கோணம், கிருஷ்ணகிரி, ஈரோடு, கடலூர், தருமபுரி ஆகிய பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் பேசினார். மோடி தன் உரையாடலில் வெளிப்படுத்திய கருத்துகள் தமிழகத்தில் பாஜகவை மையமாக வைத்து கூட்டணி விவாதங்கள் மீண்டும் வேகமெடுத்துள்ளன.

அரக்கோணத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், மோடியை வரவேற்று தமிழிசை பேசிய பிறகு, தமிழில் வணக்கம் கூறி பேசத் தொடங்கினார் பிரதமர் மோடி. தமிழக மக்களுக்குப் பொங்கல் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்தார். 2022க்குள் விவசாயிகளின் வருமானம் இருமடங்காக உயரும். மக்களுடன் நேரில் உரையாடும் வாக்குச்சாவடி முகவர்கள், பாஜகவின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் பேசினார் மோடி. இதற்கு நடுவே அரக்கோணம் பூத் பொறுப்பாளர் ஒருவர் கேட்ட கேள்வியும் அவருக்கு மோடி அளித்த பதிலும்தான் இப்போது ஹாட் டாபிக். ‘மக்கள் மத்தியில் பாஜக தமிழகத்தில் திமுக அல்லது அதிமுக அல்லது ரஜினிகாந்த் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் என்று வதந்திகள் பரவுகிறது. இதற்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தக் கேள்விக்கான பதிலை அறிய ஊடகங்கள் உட்பட அனைவரும் ஆர்வமாக இருப்பீர்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்ன மோடி, ‘20 ஆண்டுகளுக்கு முன்னரே முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் புதிய கூட்டணி முயற்சியை ஏற்படுத்தியவர். கூட்டணியில் அவரது வழியில் பாஜக செயல்படும். பழைய நண்பர்களுக்கும், கட்சிகளுக்கும் பாஜகவின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். மக்களுடன் கூட்டணி வைக்க விரும்புகிறோம். பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கவே விரும்புகிறது. தமிழகத்தை பொருத்தவரை நம்பிக்கையின் அடிப்படையில்தான் கூட்டணி இருக்கும். கட்டாயத்தின் அடிப்படையில் நம் கூட்டணி இருக்காது...’என்று விளக்கம் கொடுத்து முடித்தார்.

வாஜ்பாய் வழியில் கூட்டணி என்றால் திமுக, அதிமுக என இரு கட்சிகளுடனும் வாஜ்பாய் கூட்டணி வைத்திருந்தார். அந்த வகையில் முதலில் அதிமுகவோடுதான் கூட்டணி வைத்தார். அதன் பிறகே திமுகவுடன் கூட்டணி வைத்தார். திமுகவைப் பொறுத்தவரை ராகுலை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்து அதன் தலைவர்

ஸ்டாலின் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டார். ஒருவேளை துரைமுருகன் சொன்னது போல சீட் பங்கீட்டில் தகராறு வந்தாலும் காங்கிரஸோடு கூட்டணியை முறிக்கும் அளவுக்கெல்லாம் ஸ்டாலின் போகமாட்டார் என்பதே நிலைமை. எனவே வாஜ்பாய் காட்டிய வழி என்றால் திமுகவைத் தவிர அடுத்து இருப்பது அதிமுகதான். அந்த வகையில் மோடி அதிமுகவோடுதான் கூட்டணி அமைவதை விரும்புகிறார் என்கிறார்கள்.அதுவும் எடப்பாடியையும், தினகரனையும் இணைத்து வைக்க வேண்டும். அப்படி அதிமுக இணைந்தால்தான் அது பிஜேபிக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கிறார்.

அதற்கான முயற்சிகள் தொடர்ந்து பிஜேபி செய்து வருகிறது. முதலில் இதற்கு பன்னீர் தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தது. ஆனால், இப்போது பன்னீர் சமாதானமாகிவிட்டாராம். முன்னாள் அமைச்சர் கேபிமுனுசாமி மட்டும் அணிகள் இணைய தொடர்ந்து எதிர்ப்பை காட்டி வருகிறாராம். ‘முனுசாமிகிட்ட பேசி பாருங்க. இல்லைன்னா அவரை கழட்டிவிடுங்க. அவரால அதிமுகவில் எந்த மாற்றமும் வந்துடப் போறது இல்லை...’ என்று டெல்லியில் உள்ள பிஜேபி பிரமுகர் ஒருவர் சொல்லி இருக்கிறார்.

மேலும் முதல் ரவுண்டு பேச்சின்போது எடப்பாடி உள்ளிட்ட சிலரை நீக்கினால்தான் இணைப்பு சம்மதிப்பேன் என்று தினகரன் தெரிவித்திருக்கிறார். இதை அறிந்துகொண்ட எடப்பாடி அதற்கு பதில் கொடுக்கும் வகையில்தான், தினகரனைத் தவிர வேறு யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம் என்று வெளிப்படையாகவே அறிவித்தார். கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமியை பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தபோது கூட , அதிமுகவின் வாக்கு வங்கி பற்றி குறிப்பிட்டதை நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம். அந்த வாக்கு வங்கியும் தினகரனிடம் இருக்கும் வாக்கு வங்கியும் இணைந்தால்தான் நல்லது என்று கருதுகிறார் மோடி. எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கும். அது எடப்பாடியும், தினகரனும் இணைந்த கூட்டணி என்று உறுதியாக சொல்கிறார்கள் பாஜகவினர். இதற்காக தினகரனுக்கு கூடுதல் அழுத்தம் நெருக்கடி எல்லாம் கொடுக்கப்பட்டு வருகிறது ” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டுவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

வியாழன், 10 ஜன 2019

அடுத்ததுchevronRight icon