மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 14 ஜன 2019

அரியலூர் சிமெண்ட்ஆலை : லாரிகளால் மாசு ஏற்படுகிறதா?

அரியலூர் சிமெண்ட்ஆலை : லாரிகளால் மாசு ஏற்படுகிறதா?

அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு செல்லும் டிப்பர் லாரிகளால் கல்லக்குடி கிராமம் தூசு மற்றும் இரைச்சல் மாசுபாட்டினால் பாதிக்கப்படுகிறதா என்பதை அரியலூர் மாவட்ட வருவாய் அதிகாரி நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் கல்லக்குடி கிராமத்தைச் சேர்ந்த காந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தங்கள் கிராமத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தண்டபானி சிமெண்ட் நிறுவனத்துக்கு சொந்தமாக சுண்ணாம்பு குவாரி உள்ளது. கீழப்பளூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு கல்லக்குடி சாலை ஒரே இணைப்பு சாலை என்பதால் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் தினமும் சுண்ணாம்புக் கல் ஏற்றி செல்கின்றன. அதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இரைச்சல் மற்றும் தூசு மாசுபாட்டினால் அப்பகுதி குழந்தைகள் சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு அரியலூர் மாவட்ட வருவாய் அதிகாரியுடன் நடந்த பேச்சு வார்த்தையில் மாற்று பாதையில் லாரிகள்செல்ல அறிவுறுத்தபட்டது. மீண்டும் லாரிகள் கிராமம் வழியாக செல்வதால் மாற்றுப் பாதையில் டிப்பர் லாரிகளை இயக்க நிறுவனத்துக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதை மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையடுத்து, தண்டபாணி சிமெண்ட்ஸ் நிறுவனம் அருகில் உள்ள ஏரியை ஆக்கிரமித்து சாலை அமைத்து பயன்படுத்தி வருகின்றது. இதனால் கோடை காலத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதால் நீதிமன்றம் தலையிட்டு டிப்பர் லாரிகள் தங்கள் கிராமம் வழியாக சுண்ணாம்புக் கல் எடுத்துச் செல்ல தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை இன்று (ஜனவரி 14) விசாரித்தது நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு. அப்போது, மனுதாரர் குறிப்பிட்டுள்ளபடி, தண்டபானி சிமெண்ட நிறுவனத்திற்கு செல்லும் டிப்பர் லாரிகளால் இரைச்சல் மற்றும் தூசு மாசுபாடு ஏற்படுகிறதா என்பது குறித்து அரியலூர் மாவட்ட வருவாய் அதிகாரி நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர் நீதிபதிகள். வழக்கு விசாரணையை ஜனவரி 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

திங்கள், 14 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon