மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 10 ஆக 2020

சிறப்புச் செய்தி: உலகை உலுக்கிய பேரிடர்கள்!

சிறப்புச் செய்தி: உலகை உலுக்கிய பேரிடர்கள்!

2018ஆம் ஆண்டில் இயற்கைப் பேரிடர்களால் உலகம் முழுவதும் 225 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியாகியுள்ள வெதர், க்ளைமேட் & கேடாஸ்ட்ரோபே இன்சைட்: 2018 ஆய்வில், ‘தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகவே இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு 200 பில்லியன் டாலர்களைத் தாண்டி வருகிறது. 2000ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 10 முறை 200 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் 95 விழுக்காடு இழப்புகள் வானிலை தொடர்பான பேரிடர்களால்தான் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட இழப்பைக் காட்டிலும் 2018ஆம் ஆண்டில் ஏற்பட்ட இழப்பு சற்று குறைவேயாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.

அதிக இழப்புகளைச் சந்தித்த ஆசிய-பசிபிக் நாடுகள்

2018ஆம் ஆண்டில் ஆசிய பசிபிக் நாடுகள் 89 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார இழப்புகளை இயற்கைப் பேரிடர்களால் எதிர்கொண்டுள்ளது. இது 21ஆம் நூற்றாண்டின் சராசரியைக் (87 பில்லியன் டாலர்) காட்டிலும் சற்று அதிகமாகும். இது 2000 முதல் 2017 வரையிலான இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளின் சராசரியைக் (57.5 பில்லியன் டாலர்) காட்டிலும் 50 விழுக்காடு அதிகமாகும். இதில் 89 விழுக்காடு இழப்புகள் வானிலை தொடர்பாக பேரிடர்களால் ஏற்பட்டதே.

இயற்கைப் பேரிடர்களால் ஆசிய பசிபிக் நாடுகளில் 2018ஆம் ஆண்டில் அதிக பொருளாதார இழப்பைச் சந்தித்த நாடாக ஜப்பான் உள்ளது. 2018ஆம் ஆண்டு ஜூலையில் ஜப்பானை தாக்கிய ஜெபி புயலால் கடந்த 36 ஆண்டுகளில் ஏற்படாத அளவில் பெரும் சேதம் அந்நாட்டுக்கு ஏற்பட்டது. 10 பில்லியன் டாலரைப் பேரிடர்களால் ஜப்பான் கடந்த ஆண்டில் இழந்துள்ளது.

இந்தியா 5.1 பில்லியன் டாலரை இழந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை வெள்ளத்தில் கேரளா சிக்கியது. நவம்பர் மாதத்தில் தமிழகத்தைத் தாக்கிய கஜா புயலின் பாதிப்பிலிருந்து தமிழக டெல்டா மாவட்டங்கள் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. தமிழகத்துக்குக் கடந்த ஆண்டு மிகக் கடுமையான பொருளாதார இழப்பை கஜா புயல் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மோசமான வானிலை

கடந்த ஆண்டில் கேரளாவும், தமிழ்நாடும் கடுமையான வெள்ள பாதிப்பில் சிக்கியிருந்தாலும், நாடு முழுவதும் வழக்கமான பருவமழையைக் காட்டிலும் குறைவான மழையே பெய்துள்ளது. வறட்சியிலும் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 117 ஆண்டுகளில் குறைவான மழைப்பொழிவை இந்தியா சந்தித்த 6ஆவது ஆண்டு 2018 என்று இந்திய வானிலை மையத்தின் ஆய்வுகள் கூறுகிறது. இத்தகைய மோசமான பருவநிலை காரணமாக உலக பருவ இடர் குறியீடு-2019 பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியா முன்னிலையில் இருக்கிறது.

மற்ற பேரிடர்கள்

வானிலை சார்ந்த பேரிடர்கள் மட்டுமே கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தவில்லை. வறட்சி, காட்டுத்தீ, நில நடுக்கம், ஐரோப்பிய புயல் காற்று போன்றவையும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளன. இயற்கைப் பேரிடர்களால் ஆசிய பசிபிக் பகுதிகளில்தான் அதிகளவில் வேளாண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல்கள்: டவுன் டு எர்த்

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon