மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

ராஜாவுக்கு செக் வைக்கும் மூன்று ராணிகள்!

ராஜாவுக்கு செக் வைக்கும் மூன்று ராணிகள்!

இயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என திரையுலகில் வந்திருக்கிறார். ஒருபக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக்கொண்டே, இன்னொருபக்கம் ‘ராஜாவுக்கு செக்’ என்கிற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். சாய் ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ’ஜெயம்’ ரவி நடித்த 'மழை’ என்கிற படத்தை இயக்கியவர்.

இந்தப் படம் குறித்து சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் சாய் ராஜ்குமார். “ராஜாவுக்கு செக் படத்தின் கதையை உருவாக்கி முடித்ததுமே இதில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்கிற கேள்வி எழுந்தபோது முதல் ஆளாக என் மனதில் தோன்றியவர் சேரன் தான். காரணம், சில விஷயங்களை சிலர் சொன்னால்தான் அது சேரவேண்டிய இடத்துக்குச் சரியாக சென்று சேரும். இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு முக்கிய பிரச்சினையை மத்திம வயதில் உள்ள அதேசமயம் மக்களுக்கு நன்கு அறிமுகமான சேரன் போன்ற ஒரு நடிகர் சொன்னால் மட்டுமே அது பொதுமக்களிடம் சரியான விதத்தில் சென்று சேரும் என உறுதியாக நம்பினோம். அந்த வகையில் இந்தப் படத்தில் சேரன் ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எமோஷனல் த்ரில்லராக உருவாகியுள்ள ‘ராஜாவுக்கு செக்’, இதுவரை தமிழ் சினிமாவில் வந்திராத ஒரு ஜானரைச் சேர்ந்த படம் என தைரியமாகச் சொல்வேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில்தான் சேரன் தனது ‘திருமணம்’ படத்தையும் ஒரே மூச்சில் உருவாக்கிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ‘ராஜாவுக்கு செக்’ படத்தில் சேரனுக்கு கெட்டப் மாற்ற வேண்டியிருந்தது. அதைக் கணக்கிட்டு, அவர் திருமணம் படத்தில் நடித்து முடித்துவிட்டு வந்ததும், அவரது கெட்டப்பினை மாற்றி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கினோம். இன்னும் சில நாட்களில் முதல் காப்பி கைக்கு வந்துவிடும். சென்சார் சான்றிதழ் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க தேதி ஒதுக்கீடு ஆகிய விஷயங்களுக்குப் பிறகு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முறையாக அறிவிக்கப்படும்” என்கிறார் இயக்குநர் ராஜ்குமார்

‘ராஜாவுக்கு செக்’ வைக்கும் ராணிகளாக மலையாளத் திரையுலகைச் சேர்ந்த சராயூ மோகன், நந்தனா வர்மா மற்றும் ஒரு முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே என மூன்று பேர் நடித்துள்ளனர். சுண்டாட்டம், பட்டாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள விஜய் டிவி புகழ் இர்பான் வில்லனாக நடித்திருக்கிறார். மலையாளத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் இந்தப் படத்தை பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர். தெலுங்கில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர் வினோத் யஜமானியா இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon