மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை: சுதீஷ் தலைமையில் குழு!

தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை: சுதீஷ் தலைமையில் குழு!

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக சார்பில் சுதீஷ் தலைமையில் குழு அமைத்து விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் தொடர்பான பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு துரைமுருகன் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல அதிமுகவுடன் பாஜகவும், பாமகவும் கூட்டணி குறித்து மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகத் தகவல் வெளியான நிலையில், அதிமுக சார்பிலும் தொகுதிப் பங்கீடு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக அணியில் தேமுதிக இடம்பெறப் போவதாகவும், மதுரை தொகுதியில் பிரேமலதா போட்டியிடப் போவதாகவும் தகவல் வெளியானது. இதுதொடர்பாக நேற்று காலை 7 மணிப் பதிப்பில், அதிமுக அணி: மதுரையில் பிரேமலதா என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளார் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்.

இதுதொடர்பாக நேற்று (ஜனவரி 24) அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

குழுவின் தலைவராக கட்சியின் துணைச் செயலாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் அவைத் தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், துணைச் செயலாளர்கள் பார்த்தசாரதி, ஏ.எஸ்.அக்பர் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். தேமுதிக சார்பில் மற்ற கட்சிகளுடன் இவர்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon