மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 5 டிச 2020

அந்தமானில் விமானப்படைத் தளம்: சீனாவுக்குப் பதிலடி!

அந்தமானில் விமானப்படைத் தளம்: சீனாவுக்குப் பதிலடி!

சீனாவுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அந்தமான் தீவுகளில் மூன்றாவது விமானப்படைத் தளத்தை அமைக்க இந்தியக் கடற்படை முடிவு செய்துள்ளது.

மலாக்கா நீரிணை வாயிலாக இந்தியப் பெருங்கடலுக்குள் நுழையும் சீனக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்காணிக்கும் பணிகளை வலுப்படுத்துவதற்காகத் தொலைதூரத்திலுள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் மூன்றாவது விமானப்படைத் தளத்தை அமைக்க இந்தியக் கடற்படை முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்டை நாடுகளில் சீனக் கடற்படையின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதும், இலங்கை முதல் பாகிஸ்தான் வரையில் வர்த்தகத் துறைமுகங்களை சீனா அமைத்து வருவதும் இந்தியாவுக்குப் பிரச்சினையாக உள்ளது. அண்டை நாடுகளில் சீனா அமைத்து வரும் துறைமுகங்கள் சீனாவின் கடற்படை சாவடிகளாக மாறிவிடுமோ என்ற அச்சமும் இந்திய தரப்புக்கு உண்டு.

சீனாவின் ஆதிக்கத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, மலாக்கா நீரிணையின் நுழைவு வாயிலில் உள்ள அந்தமான் தீவுகளில் கப்பல்களும், போர் விமானங்களும் நிறுத்தப்பட்டு வருகின்றன. 2014ஆம் ஆண்டில் நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றது முதலாகவே அந்தமான் தீவுகளில் கடற்படையின் கப்பல்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரிலிருந்து வடக்குத் திசையில் 300 கிலோமீட்டர் தொலைவில் ஐஎன்எஸ் கொஹஸா என்ற இந்தப் புதிய விமானப்படைத் தளம் அமைக்கப்படவுள்ளதாக இந்தியக் கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் இந்தியப் பெருங்கடல் வாயிலாக சுமார் 1,20,000 கப்பல்கள் பயணிக்கின்றன. அவற்றில் ஏறத்தாழ 70,000 கப்பல்கள் மலாக்கா நீரிணை வழியாகவே கடந்து செல்கின்றன. ஆக, அந்தப் பகுதியில் தனது ஆதிக்கத்தைப் பதிவு செய்து சீனாவுக்குப் பதிலடி கொடுக்க இந்தியத் தரப்பு திட்டமிட்டுள்ளது.

வியாழன், 24 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon