மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 5 டிச 2020

அதிவேக நெட்வொர்க்: அதிகாலையில் எழுந்திருங்கள்!

அதிவேக நெட்வொர்க்: அதிகாலையில் எழுந்திருங்கள்!

இந்தியாவில், 4ஜி நெட்வொர்க் அதிகாலையில்தான் வேகமாக இருப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களைப் பார்ப்பது அரிதாக உள்ளது. அதுவும், அனைவரும் 4ஜி பயன்பாட்டாளர்களாக இருக்கின்றனர். இப்படி செல்போன் துணை இல்லாமல் இருக்க முடியாத பலரும், பல நேரங்களில் நெட்வொர்க் வேகம் குறைவாக இருக்கிறது எனக் கடுப்பாவது உண்டு. இவர்களுக்காகவே ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, எந்த நேரத்தில் நெட்வொர்க் வேகமாக இருக்கும் என்பது ஆய்வு மேற்கொண்டுள்ளது ஓப்பன் சிக்னல் நிறுவனம்.

4ஜி நெட்வொர்க் வேகம் குறித்து, இணைய வேகத்தைக் கணிக்கும் நிறுவனமான ஓப்பன் சிக்னல் என்ற நிறுவனம் இந்தியாவின் 20 முக்கிய நகரங்களில் இணைய வேகம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதில், இரவு 10 மணியளவில் டவுன்லோடு வேகம் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஏனெனில், இந்த நேரத்தில்தான் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, தூங்குவதற்கு முன்பு வீடியோ, படங்கள் போன்றவற்றைப் பலரும் பார்க்க ஆரம்பிப்பார்கள். அதுபோன்று, அதிகாலை 4 மணியளவில் 4ஜி டவுன்லோடு வேகம் சிறப்பாக இருப்பது தெரிய வந்தது. பெரும்பாலான பயன்பாட்டாளர்கள் இரவு நேரத்தில் செல்போன் பயன்படுத்திவிட்டு, இந்த நேரத்தில்தான் நன்றாகத் தூங்குவார்கள். அதனால், 4ஜி நெட்வொர்க் அதிவேகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரவலான மொபைல் பிராட்பேண்ட் வேகம், இந்தியாவின் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் காட்டுகிறது. ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னிலையில் இருக்கும் நாடாக இந்தியா உள்ளது. ஜியோவின் வருகையால் தொலைத்தொடர்பு துறையில் ஒரு மாபெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் செல்போனில் அதிகளவு டேட்டாவைப் பயன்படுத்துகின்றனர். இதனால், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளன.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் ஒப்பீட்டளவில் மெதுவான சராசரியான 4ஜி டவுன்லோடு வேகத்தைப் பெறுவதற்கு நெட்வொர்க் நெரிசலும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 24 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon