மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

பிடிபட்ட சின்னத்தம்பி யானை!

பிடிபட்ட சின்னத்தம்பி யானை!

கோவை வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் பயிர்ச்சேதம் ஏற்படுத்தி வந்த சின்னத்தம்பி யானையைப் பிடித்துள்ளனர் தமிழக வனத் துறையினர்.

கோவை மாவட்டம் வரப்பாளையம், பெரிய தடாகம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் சுற்றிவந்த இரண்டு யானைகளுக்குச் சின்னத்தம்பி, விநாயகன் என்று பெயரிட்டனர் அங்குள்ள கிராம மக்கள். தனித்தனியாகச் சுற்றி திரிந்த இந்த இரு காட்டு யானைகளாலும், அப்பகுதிகளில் பெருமளவில் பயிர்ச்சேதம் ஏற்பட்டது. கடந்த நவம்பர் மாதம் இந்த இரண்டு யானைகளையும் பிடிக்குமாறு வனத் துறையினருக்கு உத்தரவிட்டது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

இதையடுத்து, கடந்த டிசம்பர் 18ஆம் தேதியன்று விநாயகன் என்ற காட்டு யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர் வனத் துறையினர். இந்த யானை முதுமலை காட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

ஆனால், சின்னத்தம்பி யானையைப் பிடிக்க முடியாமல் தமிழக வனத் துறையினர் திணறினர். இதனால் கும்கி யானைகள் உதவியுடன் அதனை வளைக்கும் முயற்சியில் இறங்கினர். இதற்காக கலீம், விஜய், முதுமலை, சேரன் என்ற நான்கு கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டது.

இன்று (ஜனவரி 25) காலையில் கும்கி யானைகள் உதவியுடன் சின்னத்தம்பி யானை சுற்றிவளைக்கப்பட்டது. அதற்கு 2 முறை மயக்க ஊசி செலுத்தினர் மருத்துவக் குழுவினர். இதனால் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் சின்னத்தம்பி யானையைப் பிடித்தனர் தமிழக வனத் துறையினர். மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மயக்க ஊசி செலுத்தி யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விநாயகன் யானையைப் பிடித்தபோதும், மனோகரனின் தலைமையிலான குழுவினரே ஈடுபடுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சின்னத்தம்பி யானையின் உடல்நலம் சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கழுத்தில் அடையாள அட்டை கட்டித் தொங்கவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை டாப்சிலிப் அருகேயுள்ள வரகளியாறு என்ற இடத்தில், சின்னத்தம்பி யானையை விட முடிவு செய்துள்ளனர் தமிழக வனத் துறையினர்.

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon