மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

கொடநாடு விவகாரம்: சிபிஐ விசாரணை கிடையாது!

கொடநாடு விவகாரம்:  சிபிஐ விசாரணை கிடையாது!

கொடநாடு விவகாரத்தை சிபிஐ விசாரிக்கக் கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்துள்ளது.

கொடநாடு கொள்ளை மற்றும் கொலையில் முதல்வரை சம்பந்தப்படுத்தி குற்றம் சாட்டியிருந்தார் தெகல்ஹா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல். இந்த விவகாரத்தை மாநில காவல் துறை விசாரிக்கக் கூடாது எனவும் சிபிஐதான் விசாரிக்க வேண்டுமெனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்று முதல்வர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடநாடு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். முதல்வர் மீதே புகார் உள்ளதால் அதனை அவரின் கீழ் இயங்கும் தமிழக போலீசார் விசாரிப்பது முறையாக இருக்காது. சிபிஐ விசாரித்தால்தான் இதற்கு பின்னால் இருக்கும் உண்மைகள் வெளிவரும். எனவே சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று (ஜனவரி 25) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருக்கக் கூடிய மேத்யூ என்பவர் யார், அவருக்கு இந்த விவகாரத்தில் ஏதேனும் தொடர்பிருக்கிறதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “அவர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் இல்லை. வழக்கில் சம்பந்தப்பட்ட சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள். எனவே இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

ஆனால் சிபிஐ விசாரணை கோரிக்கையை ஆரம்பத்திலேயே நிராகரித்த நீதிபதிகள், “இந்த வழக்கை நாங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. வழக்கை விசாரிக்க எவ்வித முகாந்திரமுமில்லை ” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon