மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

தாவோஸ்: தூத்துக்குடி படுகொலை பற்றிய படம் அறிமுகம்!

தாவோஸ்: தூத்துக்குடி படுகொலை பற்றிய படம் அறிமுகம்!

தூத்துக்குடி படுகொலை பற்றிய திரைப்படம் சுவிட்சர்லாந்தில் நடக்கும் உலக பொருளாதார மன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு மே 22 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டங்களின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் உயிரிழந்ததோடு பலர் படுகாயமடைந்தனர். இவ்விவகாரம் தொடர்பாக சந்தோஷ் கோபால் இயக்கும் திரைப்படம் சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் நேற்று (ஜனவரி 24) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ‘ஒரு சம்பவம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சந்தோஷ் கோபால் ஏற்கெனவே ஜல்லிக்கட்டுப் போராட்டங்கள் பற்றிய படத்தை இயக்கியுள்ளார். தற்போது சேலம் எட்டுவழிச் சாலை பற்றிய படத்தை இயக்கி வருகிறார்.

தூத்துக்குடி படுகொலை பற்றிய படம் குறித்து சந்தோஷ் கோபால் பேசுகையில், “ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மூடப்பட வேண்டும் என போராட்டம் நடத்தியவர்கள் மே 22 அன்று சுட்டுக்கொல்லப்பட்டது அண்மைக்காலத்தில் மிக அதிர்ச்சிக்குரிய சம்பவங்களில் ஒன்றாகும். என்னுடைய ‘பசுமைவழிச் சாலை’ படத்தில் வரும் ஒரு கதாப்பாத்திரம் சமூக போராட்டங்களில் கலந்துகொள்பவராக இருக்கிறார். தூத்துக்குடி போராட்டத்திலும் அவருக்கு பங்கு இருக்கும்படி சில காட்சிகளை திட்டமிட்டோம். அதுபற்றி ஆய்வு செய்தபோது, தூத்துக்குடி போராட்டங்கள் குறித்து தனியாக ஒரு படத்தையே இயக்கலாம் என உணர்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

அரசு கொள்கைகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் சர்வாதிகாரத்தை பற்றி இம்மூன்று படங்களும் பேசும் என்று அவர் தெரிவித்துள்ளார். “ஜல்லிக்கட்டு பிரச்சினையாக இருந்தாலும், பசுமைவழிச்சாலை விவகாரமாக இருந்தாலும், இவையனைத்தின் பின்னணியிலும் கார்ப்பரேட்டுகள் உள்ளன” என்று அவர் கூறினார்.

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon