மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

10% இட ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

10% இட ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

பொதுப்பிரிவினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திருத்தம் தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னேறிய சாதிகளில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் தொடர்பாக மத்திய அரசுக்கு இன்று (ஜனவரி 25) உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கொகாய் தலைமையிலான அமர்வு வெளியிட்டுள்ள உத்தரவில், “இவ்விவகாரம் தொடர்பாக நாங்கள் விசாரணை நடத்துவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக பதிலளிப்பதற்கு மத்திய அரசுக்கு நான்கு வாரம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், 10 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு இடைக்காலத்தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படக்கூடாது எனவும், சட்டத்திருத்தத்தை ரத்து செய்யவேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சட்டத்திருத்தம், பொதுப்பிரிவினருக்கு மட்டுமே பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதாகவும், 50 விழுக்காடு இடஒதுக்கீட்டு உச்சவரம்பை மீறுவதாகவும் உள்ளதாக மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் 10 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவளித்துள்ளன. அதில் பகுஜன் சமாஜ், இடதுசாரிகளும் அடக்கம்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் முன்னேறிய சாதிகள் பாஜகவுக்கு ஆதரவாக இல்லாமல்போனதால், அவர்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் இடஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது மோடி அரசு. இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளபோதும், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து மத்திய அரசு பணிகளிலும் 10 விழுக்காடு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon