மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜன 2019

பாஜக-அதிமுக: கூட்டணி சமையலுக்காக தினகரனின் குக்கர் ஆஃப்?

பாஜக-அதிமுக: கூட்டணி சமையலுக்காக  தினகரனின் குக்கர் ஆஃப்?

வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைக்கப்பட வேண்டும், அதுவும் தினகரன் தரப்பும் இணைந்த அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் அது வாக்கு பலம் மிக்க கூட்டணியாக அமையும் என்று பாஜக தீவிர முயற்சியில் இருக்கிறது.

இதற்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கூட லேசாக செவி சாய்க்கிறது. ஆனால் தினகரனோ இணைப்பு என்ற வார்த்தையே பிடிக்காது என்பதைப் போலத்தான் கருத்து சொல்லி வருகிறார்.

“திமுகவில் இருந்து வெளியே வந்தவுடன் எம்.ஜி.ஆர். என்ன மீண்டும் திமுகவிலா சேர்ந்தார்? அவர் தீய சக்தியை எதிர்த்து வெளியேறினார். நாங்கள் துரோக சக்தியை எதிர்த்து வெளியேறினோம். தேர்தலில் வென்று அதிமுகவை மீட்போம். அதுவரை இணைப்பு என்பதே கிடையாது” என்பதுதான் டிடிவி தினகரனின் கருத்து.

ஆனால் பாஜக தமிழகத்தில் தனியாக நடத்திய ஆய்விலோ, ‘’இப்போது திமுக கூட்டணி தமிழகத்தில் மரண மாஸ் ஆக இருக்கிறது. அதை எதிர்த்து ஓரளவாவது ஜெயிக்க வேண்டுமென்றால் அது தினகரன் இணைந்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால்தான் முடியும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில்தான் தேர்தல் அறிவிக்கை வெளிவருவதற்குள் இந்த கூட்டணியை உருவாக்க பிரயத்தனம் செய்து வருகிறார்கள் பாஜகவினர்.

இதன் வெளிப்பாடுதான் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தினகரனுக்கு தனி சின்னம் கொடுக்க முடியாது என்று சொல்லியிருப்பது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.

இதுபற்றி டெல்லி பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பேசினோம்.

“23-11-17 அன்று தேர்தல் ஆணையம் ஓ.பன்னீர்-எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னத்தைக் கொடுத்துவிட்டது. ஆனால் அதன் பிறகு நடந்த ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனுக்கு ஏற்கனவே அவர் நின்ற தொப்பி சின்னம் கிடைக்கக் கூடாது என்று கடுமையாக போராடியது அதிமுக. காரணம் ஏற்கனவே நின்ற தொப்பி சின்னத்தில் நின்றால் பழைய செல்வாக்கை வைத்து அவர் வென்றுவிடுவார் என்று கருதினார்கள் எடப்பாடியும், பன்னீரும். இதையடுத்து பலத்த போராட்டத்துக்குப் பிறகு ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டது. சில நாட்களிலேயே சின்னத்தை பிரபலப்படுத்தி ஆர்.கே.நகரில் வெற்றிபெற்றார் தினகரன்.

இதையடுத்து தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தாங்கள் குக்கர் சின்னத்தில் நிற்க அனுமதிக்க வேண்டுமென்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் முறையிட்டார். அப்போதும் எடப்பாடி- பன்னீர் தரப்பு மனு போட்டு தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கக் கூடாது என்று வாதிட்டனர். இதைக் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா பள்ளி, ‘உங்களுக்கு இரட்டை இலை சின்னம் இருக்கிறது, அதிமுக கட்சி இருக்கிறது. பின் இவர் ஏன் குக்கர் சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது என்கிறீர்கள்?’ என்று கேள்வி கூட கேட்டார்.

அதன் பின் திருவாரூர் இடைத் தேர்தலுக்காக மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட இந்த வழக்கிலும் தினகரன் தரப்பினருக்கு குக்கர் சின்னம் கொடுக்கக் கூடாது என்று எடப்பாடி- பன்னீர் தரப்பினர் வாதிட்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையமும், ‘தனிக் கட்சியாக பதிவு செய்யாத பட்சத்தில் தனி சின்னம் வழங்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். இதற்கு பெரிய பின்னணி இருக்கிறது” என்றவர்கள் தொடர்ந்தனர்.

“தினகரன் தரப்பு தேர்தல் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவர் தனிக் கட்சி என்று பதிவு செய்தால்தான் தனி சின்னம் என்று தேர்தல் ஆணையம் சொல்வதன் பின்னால் மத்திய அரசின் காய் நகர்த்தலும் இருக்கிறது என்கிறார்கள் டெல்லியில்.

அதாவது தினகரன் அதிமுகவுடன் இணைந்துவிட வேண்டும். இல்லையேல் அவர் தனிக்கட்சியாக பதிவு செய்துகொள்ள வேண்டும். அவர் தனிக்கட்சியாக பதிவு செய்தால் அதிமுகவில் கோரி வரும் உரிமையை சட்ட ரீதியாக இழந்துவிடுவார். மேலும் இப்போது அவர் தனிக்கட்சியாக பதிவு செய்தால் அவரது சுயேச்சை எம்.எல்.ஏ. என்ற பதவிக்கும் சிக்கல் ஏற்படும் என்பதால்தான் அவருக்கு குக்கர் சின்னம் கிடையாது என்ற நெருக்கடி தரப்படுகிறது. அதிமுக மீதுள்ள உரிமையை சட்ட ரீதியாக இழப்பதற்கு தினகரன் தயாராக இல்லை. அதேநேரம் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வென்று தேர்தல் வெற்றிக்குப் பிறகு அதிமுகவை கைப்பற்றலாம் என்பதே அவரது நோக்கம். தினகரனின் இந்த பயணத்தைத் தடுத்தால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று பாஜகவிடம் அதிமுக தரப்பு ஒரு டிமாண்ட் வைத்திருக்கிறது.

அதனால்தான் இதற்கெல்லாம் அடிப்படையான குக்கர் சின்னத்தை வழங்காமல் அவரது ஆதரவாளர்கள் வரும் சட்டமன்ற இடைத்தேர்தலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பொது சின்னத்தில் நிற்கக் கூடாது என்ற கடுமையான நெருக்கடி தரப்பட்டு வருகிறது. பாஜக-அதிமுக கூட்டணிக்கு குக்கர் இடையூறாக இருப்பதால் குக்கரை ஆஃப் செய்துவிட்டு கூட்டணி சமையல் நடத்த டெல்லி திட்டமிட்டு வருகிறது” என்கிறார்கள்.

நாம் இதுகுறித்து தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் பேசும்போது, “குக்கர் சின்னம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் தேர்தல் ஆணையத்திடம் சரமாரியாக கேள்விகள் கேட்டுள்ளனர். அதிமுக இரண்டு அணியாக பிரிந்திருந்தபோது இரட்டை மின் விளக்கு, தொப்பி ஒதுக்கியதே தேர்தல் ஆணையம். அப்படி ஒதுக்க அதிகாரம் இருக்கும்போது நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையா என்று நீதிமன்றமே கேட்டிருக்கிறது. எனவே குக்கர் விஷயத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெறுவோம்” என்றார்.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

வெள்ளி 25 ஜன 2019